உள்ளூர் செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

மண்ணின் கரிமப்பொருட்களால் விளையும் பயன்கள் : மண்ணின் துகள்கள் வடிவமைப்பை மேம்படுத்தி துகள் இடைவெளியை அதிகப்படுத்துகின்றன. இதனால் நீர்பிடிப்பு தன்மையும் நல்ல காற்று பரிமாற்றமும் ஏற்படும்.தழை, மணி, கந்தகம், நுண்ணூட்டங்கள் முதலியன மக்கும் பொழுது பயிருக்கு கிடைக்கின்றன. கரிம மூலக்கூறுகளின் இழுப்பு விசையால் நேர், எதிர் விசை பயிர்ச்சத்துக்கள் கரிமக்கூறுகளின் பரப்பில் பிடித்து வைத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் வேருக்கு கீழ் வடியும் நீரில் அவை அடித்துச் செல்லாமல் தடுக்கின்றன.மண்ணின் கரிம அயனிகள் பரிமாறும் நிலையை அதிகரிக்கின்றன. அதனால் ஆலை உரங்களை மண்ணிலிடும் போது அவற்றோடு கூட்டுச் சேர்ந்து உர உபயோகத்திறனை அதிகரித்துப் பயிர் விளைச்சலையும் அதிகரிக்கிறது. மண்ணின் கரிமம் அதிகரிக்கும் பொழுது மண் இயல்பு, அடர்த்தி குறைகிறது. இதனால் மண்ணை உழுவது முதல், விதை முளைப்பு, பயிர் வளர்ச்சி, நீர்ப்பிடிப்பு முதலியன எளிதாகின்றன. மண்ணின் கரிம அளவை 1 சத்திலிருந்து 2 சதம் வரை அதிகரித்தால் மண் அரிமானத்தை 5 மடங்கு வரை குறைக்கலாம்.மண்ணில் எருவை அதிகம் இட்டு சாகுபடி செய்வதால் மண்ணை உழாமலேயே பயிரிட முடியும். மேலும் உரங்களையும், எருவையும் சேர்த்து மண்ணிலிட்டு தொடர்ந்து பயிரிட்டு வரும்போது உயர் விளைச்சலை பெறுவதோடல்லாமல் என்றென்றும் குறையாத மண் வளத்தை பெற முடியும்.TNAU பருத்தி பிளஸ் : பருத்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் ஏக்கருக்கு 2.5 கிலோ தேவைப்படும். பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 200 லிட்டர் திரவம் தேவைப்படும் தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பருத்தி பிளஸ் தெளிப்பதால் பூ மற்றும் சப்பைகள் உதிர்வது குறையும். காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழி வகுக்கிறது. விளைச்சல் 18 சதம் வரை அதிகரிக்கிறது. வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கிறது. தகவல் : வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104.சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி நுட்பம் : கோ.5 வெங்காயத்தை நவம்பர் மாதம் நடவு செய்ய வேண்டும். தொழுஉரம் (மக்கியது) ஏக்கருக்கு 40 வண்டி போட வேண்டும். அத்துடன் வேப்பம் பிண்ணாக்கு 50 கிலோ, அசோஸ்பைரில்லம், 4 கிலோ பாஸ்போ பேக்டீரியா, 3 கிலோ நன்கு மக்கிய குப்பையுடன் கலந்து போட வேண்டும். பயிர் வளர்ந்து வரும் நிலையில் தக்க பயிர்பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும்.நடவு செய்த வெங்காயம் நட்ட 30-35 நாளில் பூக்க ஆரம்பிக்கும். பூ வந்தவுடன் நாப்தலின் அசிடிக் அமிலத்தை தெளிக்க வேண்டும். அதாவது 100 மில்லி கிராமை, 100 லிட்டர் நீரில் கரைத்தால் 100 பிபிஎம் வரும். இதனைத் தெளிப்பதால் தரமான விதை கிடைக்கும். விதை உற்பத்தியும் அதிகரிக்கும்.விதைகள் கருப்பாக இருக்கும். விதைகள் முற்றியவுடன் கருப்பு விதைகள் வெளியே தெரியும். தக்க பருவத்தில் பூங்கொத்துக்களை வெட்டி எடுக்க வேண்டும். இலைமேல் விதைகள் காய்ந்து சிதறிவிடும். ஒரே நேரத்தில் எல்லா பூங்கொத்துக்களையும் வெட்டி எடுக்கக் கூடாது. விதை முற்றிக் கருப்பு விதைகள் வெளியே தெரியும் தருணத்தில் தான் வெட்டி எடுக்க வேண்டும். இரண்டு மூன்று முறை முற்ற முற்ற எடுக்க வேண்டும்.அறுவடை செய்த பூங்கொத்துக்களை வெயிலில் நன்கு உலர வைத்து விதைகளை பிரித்து எடுக்க வேண்டும். விதைகளை பிஎஸ்எஸ் 12x12மி என்ற அளவில் துளைகள் உள்ள சல்லடையில் சலிக்க வேண்டும். சல்லடையில் நிற்கும் விதைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 200 - 250 கிலோ விதை கிடைக்கும். விதைக்கு நல்ல விலையும் கிடைக்கும். விதையை சேமித்து வைக்க 1 கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் பவிஸ்டின் மருந்தை கலந்து விடவும்.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !