உள்ளூர் செய்திகள்

தொட்டுத் தொடருது பாண்டியூர் பட்டு

பட்டு என்றாலே சட்டென நினைவுக்கு வருவது காஞ்சிபுரம். தற்போது தமிழகம் முழுவதும் சிறு, குறு விவசாயிகள் பட்டு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பட்டு வளர்ப்புக்கு அதிகளவு மானியம் கிடைப்பதாலும், வருவாய் இரட்டிப்பு என்பதாலும் பட்டு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடம் வகிக்கிறது. எனினும் மீன் வளர்ப்பை அடுத்து விவசாயத்திலும் விவசாயிகளின் கவனம் திரும்பி வருகிறது. ராமநாதபுரம் அருகே பாண்டியூர் கிராமத்தில் அரசு பட்டு வளர்ச்சித்துறை உள்ளது. இங்கு வீரிய ரக மல்பெரி நாற்று உற்பத்தி மற்றும் இளம்புழு வளர்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 4.36 ஏக்கர் நிலத்தில் 2 லட்சம் மல்பெரி நாற்றுகள் வளர்க்கின்றனர். 2 ஏக்கரில் இளம்புழு வளர்ப்பு மற்றும் விதைக்குச்சி பராமரிப்பு நடக்கிறது. மல்பெரி நாற்று ஒன்றுக்கு ரூ.1க்கு விவசாயிகளுக்கு வழங்குகின்றனர். இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மல்பெரி நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.பட்டு வளர்ச்சித்துறை பாண்டியூர் பிரிவு உதவி பட்டு ஆய்வாளர் கணேசமூர்த்தி கூறியதாவது: மல்பெரி சாகுபடி மற்றும் பட்டு வளர்ப்பு விவசாயிகள், ஏக்கருக்கு 4,500 நாற்றுகள் வீதம் நட வேண்டும். ஒரு ஏக்கர் மல்பெரி சாகுபடி செய்தால் 200 முட்டை தொகுதிக்கான (ஒரு தொகுதி முட்டை என்பது300 முதல் 500 புழுக்களை கொண்டது) பட்டுப்புழுக்களை வளர்க்கலாம். பாண்டியூர் மையத்தில் இருந்து 100 புழுக்களை வளர்க்க கூலி ரூ.350 மற்றும் ரூ.550 கொடுத்து ஒரு தொகுதி முட்டைக்கான பட்டுப்புழுக்களை வாங்கலாம். இரண்டே மாதங்களில் 300 முட்டை தொகுதி பட்டுப்புழுவில் இருந்து 200 கிலோ பட்டு உற்பத்தி செய்யலாம். மல்பரி தரமாக இருந்தால் 250 கிலோ வரை பட்டு உற்பத்தி செய்யலாம்.தற்போது, சி.எஸ்.ஆர்., எனப்படும் ஒரு கிலோ வெண்பட்டு ரூ.350 முதல் 400 வரை விற்கப்படுகிறது. சி.பி., எனப்படும் மஞ்சள் பட்டிற்கு ரூ.280 முதல் 320 வரை விலை கிடைக்கிறது. இரண்டே மாதங்களில் ஒரு ஏக்கரில் மல்பரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்த்தால் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். இரண்டு ஏக்கரில் மல்பெரி வளர்த்தால் ஒன்று மாற்றி ஒன்று என தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.70 ஆயிரம் வருவாய் பெறலாம்.பட்டு வளர்ச்சித்துறை சார்பில், விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் 5,500 மல்பெரி நாற்று வாங்கி விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் நடவு செய்தால் அவருக்கு நடவு மானியமாக ரூ.10,500 வழங்குகிறோம். முட்டை வளர்க்க 1,000 சதுர அடியில் கொட்டகை அமைக்க வேண்டும். சுற்றிலும் மரங்கள் உள்ள இடமாக இருக்க வேண்டும். அல்லது ஈரப்பத நிலை உள்ளதாக இருக்க வேண்டும். இந்த கொட்டகை அமைக்க ரூ.87 ஆயிரத்து 500 மானியம் வழங்குகிறோம். சொட்டு நீர்ப்பாசனத்திற்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், மல்பெரி பறிப்பு கருவி, மருந்து தெளிப்பான் உள்ளிட்ட பொருட்களும் மானியமாக வழங்குகிறோம் என்றார். தொடர்புக்கு 99651 03209.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !