உணர்வுகளுக்கு உயிர்ப்பூட்டும் உணவுக்காடுகள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே புதிய இடையூரில் 15 ஏக்கர் பரப்பளவில் 12ஆயிரம் மரங்களை வளர்த்து இயற்கைக்கும் மனிதர்களுக்கும் உயிர்ப்பூட்டி வருகிறார் விவசாயி இறையழகன் என்ற தெய்வசிகாமணி.300க்கும் மேற்பட்ட வகைகளில் 12ஆயிரம் மரங்கள் நடவு செய்து சூழல் சுற்றுலா ஆக்கியது குறித்து தெய்வசிகாமணி கூறியதாவது: இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துவிட்டு சில ஆண்டுகள் பணியில் இருந்தேன். பின்னர் ஒப்பந்ததாரராக ரியல் எஸ்டேட் பிசினஸ் தொழில் செய்து வந்தேன். அப்போது இயற்கை விவசாயி நம்மாழ்வாருடன் தொடர்பு கிடைத்தது. அவருடன் பேசும்போது இயற்கை சார்ந்த நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது.அந்த நேரத்தில் தான் மாமல்லபுரம் புதிய இடையூரில் 2009ல் மனையாக பிரிப்பதற்காக 15 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். நம்மாழ்வாரிடம் பேசிய பின் அந்த நிலத்தை மனையாகப் பிரிக்க மனது வரவில்லை. நிலத்தில் எந்த வகையான பயிர் செய்யலாம் என நம்மாழ்வாரிடம் கேட்டபோது 'போய் நிறைய பண்ணைகளை பார்த்து வா, அந்த அனுபவம் உனக்கு கை கொடுக்கும்' என்றார். நிறைய பண்ணைகளை பார்த்தபோது எதுவும் என் மனதிற்கு பிடித்தமாக இல்லை.மீண்டும் அவரிடம் சென்ற போது 'இதுதான் உனக்கான பாடம், அப்படி என்றால் உனக்கு பிடித்தமான விதத்தில் 15 ஏக்கர் நிலத்தை நீயே தயார் செய்து கொள்' என்றார். எனக்கு மரங்கள் தான் முதலில் நினைவுக்கு வந்தது. தேக்கு, மகோகனி, செம்மரம், கடம்ப மரம் உட்பட பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்தேன். இந்த மரங்கள் 60 முதல் 70 அடி உயரம் வளரக்கூடியவை. இவை வளரும் போதே மா, நெல்லி, கொய்யா, சப்போட்டா உட்பட பல்வேறு பழவகை மரக்கன்றுகளையும் ஊடுபயிராக நடவு செய்தேன்.பெரிய மரங்கள் நீண்டு வளரும் போது ஊடுபயிராக இந்த பழ மரங்கள் எனக்கு வருமானம் தந்தன.நிலத்தின் பள்ளமான பகுதி பார்த்து ஒரு ஏக்கர் அளவில் குளம் வெட்டினேன். பெய்த மழை முழுவதும் குளத்தில் நிரம்பியதால் மீன் குஞ்சுகளை விட்டேன். போர்வெல், கிணறு இருந்தாலும் மழை பெய்யும் போது அதில் வழிந்தோடும் நீரில் குளம் நிரம்பி விடும். அடுத்த மழை பெய்யும் வரை குளத்தில் நீர் இருக்கும். மதிய நேரம் தோட்டத்திற்கு சென்று தரையில் வெயில் படும் இடத்தில் எல்லாம் மரம் நட வேண்டும் என்று நம்மாழ்வார் சொன்னதற்கு ஏற்ப மரக்கன்றுகளைத் தொடர்ந்து நட்டு வந்தேன்.எனது தோட்டத்திற்குள் சென்று மேலே பார்த்தபோது வானம் தெரியவில்லை, கீழே கவனித்தபோது நிலமும் தெரியவில்லை. அதாவது நிலம் முழுவதும் மரங்களின் இலைகள் உதிர்ந்து அதன் சரகுகள் காணப்பட்டது. இவை அனைத்தும் மரங்களுக்கும் பழ மரங்களுக்கும் உரமாக மாறியது.இதுதான் உயிர் சூழலின் தத்துவம் என்பதை உணர்ந்தேன். தோட்டத்தில் வெயிலின் வெளிச்சம் தடைபட்டதால் பழ மரங்களின் விளைச்சல் குறைந்து விட்டது. அதை ஈடுகட்டும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 5000 மரங்களின் மீது மிளகுக்கொடிகளை படரவிட்டேன். அவை காய்ப்பு பருவத்தில் உள்ளது. மேலும் நூறு காபி செடி, கோகோ மரக்கன்றுகளை ஊடுபயிராக பயிரிட்டேன்.இங்கு உயிர்ச்சூழல் நன்றாக இருப்பதால் வெளி வெப்பநிலையை விட 5 டிகிரி அளவு குறைவாக உள்ளதை அனுபவத்தில் அறிந்தேன். அக்ரோ டூரிசம் ஆக மாற்றத்திட்டமிட்டேன். பண்ணையைச் சுற்றி சாலை அமைத்தேன், அதில் நடை பயணம், சைக்கிள், மாட்டு வண்டி, டிராக்டர் பயணம் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடு செய்தேன்.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மீன் பிடித்து மகிழலாம். பக்கத்திலேயே சேற்று குளியல், மழைக் குளியல் பம்ப்செட் குளியல் என விதவிதமாக வகைப்படுத்தி வைத்துள்ளேன். பள்ளி குழந்தைகளும் இயற்கையை விரும்புபவர்களும் விடுமுறை காலங்களில் ஆர்வத்துடன் இங்கு வந்து செல்கின்றனர். குளத்தில் படகு சவாரி விடவும் மரங்களுக்கு நடுவே பரண், குடில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளேன்.இதுவரை இடுபொருளுக்கென தனியாக எந்த செலவும் செய்யவில்லை. மரங்களில் இருந்து வரும் இலைகள் தான் உரம் ஆகி பயன்தருகிறது. மரப்பயன் தரும் வணிக மரங்களை 30 ஆண்டுகள் வரை முழுதாக வளரவிட்டால் மட்டுமே தரமான மரங்களாக மாறும். அதுவரை பழ மரங்களும் காப்பி கோகோ மிளகு கொடிகளும் சூழல் சுற்றுலாவும் எனக்கு வருமானம் தரும் என்கிறார்.ஆயிரம் வகையான 15ஆயிரம் மரங்களை பண்ணையில் நட வேண்டும் என்ற இலக்கு வைத்துள்ளேன். மரங்களுக்கு இடைவெளி தேவை என்பது ஒருவித மாயை. 15 அடி முதல் 20 அடி இடைவெளி என்பது தேவையில்லாத விஷயம்.காட்டில் மரங்கள் இடைவெளி விட்டுக்கொண்டா வளர்கின்றன. என் நிலத்தில் அதிகபட்சமாக 2 முதல் 5 அடி இடை வெளியில் ஒழுங்கற்ற முறையில் அவற்றின் விருப்பம் போல வளர்கின்றன. காட்டுயிர் சூழலை ஏற்படுத்தி உள்ளதால் மண்ணும் உயிர்ப்புடன் இருக்கிறது; நம்மையும் உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது என்கிறார் தெய்வசிகாமணி இவரிடம் பேச: 93400 47779.--எம்.எம்.ஜெயலெட்சுமி,மதுரை.