என்ன வளம் இல்லை இந்நாட்டில்... வறண்ட நிலத்தை வளமாக்கிய விவசாயி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நல்லுார் கிராமத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வறண்ட இடத்தை வளமாக்கி விவசாயி சின்னகுமார் சாதனை படைத்து வருகிறார்.இவர் 40 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் கிராமங்கள் முழுவதும் வறண்ட நிலங்களாக உள்ளன. சின்னகுமார் தனது நிலத்தில் 380 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். இங்கு 75 சதவீதம் அரசு மானியத்தில் சோலார் பம்புசெட் அமைத்துள்ளார். இதன் மூலம் ஆழ்துளையில் தண்ணீரை பம்பிங் செய்து ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறார். இதில் சீசனுக்கு ஏற்ப மிளகாய், பருத்தி, நெல் சாகுபடி செய்கிறார்.மற்ற நேரங்களில் கத்தரி, வெண்டை பயிரிடுகிறார். ஆழ்துளையில் போதுமான தண்ணீர் உள்ளதால் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்கிறார். நிலத்தின் ஒரு பகுதியில் விவசாயத்துறை மானியத்தில் கோழிப்பண்ணை அமைத்து 200க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கிறார். அவை நிலத்தில் உள்ள உணவுகளை உண்டு வாழ்கிறது. மற்றொரு பகுதியில் பண்ணை குட்டை அமைத்து அதில் கட்லா, கெண்டை மீன் வளர்க்கிறார். மீன் வளர்ப்புக்கு போக மீதமுள்ள நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார். விவசாய நிலத்தில் குப்பை சேகரிப்பு மையம் அமைத்து மக்கும் குப்பையை பிரித்தெடுத்து, அதனை உரமாக தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார். இந்த வயலில் சுகாதாரம் பேணும் வகையில் தனி நபர் கழிப்பறை அமைத்து சுகாதாரத்தையும் பாதுகாக்கிறார். சின்னக்குமார் கூறுகையில், ''விவசாயத்துறையின் மானிய திட்டங்களை பயன்படுத்தி விவசாயம் சார்ந்த தொழில்களான கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். ஆழ்துளையில் 200 அடியில் இருந்து தண்ணீர் உள்ளது. அதற்கேற்ப 5 ஏக்கர் நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்கிறேன். ஆண்டு முழுவதும் சீசனுக்கு ஏற்ப விவசாயம் செய்து லாபம் பெறுகிறேன், என்றார்.தொடர்புக்கு: 74025 11395.- அன்பழகன், ராமநாதபுரம்