உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகிறது பெங்களூரு மாநகராட்சி

பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகிறது பெங்களூரு மாநகராட்சி

பெங்களூரு: மாநில அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து, 2025 - 26ம் ஆண்டில், 17,000 முதல் 18,000 கோடி ரூபாய் பட்ஜெட் தாக்கல் செய்ய, பெங்களூரு மாநகராட்சி தயாராகி வருகிறது.அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முக்கியமான திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில், 2025 - 26ம் ஆண்டு பட்ஜெட்டில், பெங்களூருக்கு 7,000 கோடி ரூபாய் நிதியுதவியை மாநில அரசு அறிவித்தது.மாநில அரசை தொடர்ந்து பெங்களூரு மாநகராட்சியும் பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகி வருகிறது.சொத்து வரி மற்றும் அரசின் நிதியுதவியை கருத்தில் கொண்டு, பட்ஜெட் தாக்கல் செய்ய, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பொதுமக்களுக்கு சுமையேற்றாமல் விளம்பர வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.மாநில அரசின் நிதியுதவியுடன், ரூ.40,000 கோடி செலவிலான கிழக்கு - மேற்கு, வடக்கு - தெற்கு சுரங்க சாலை, ஏரி சீரமைப்பு, வெள்ள பாதிப்பை தடுக்கும் பணிகள், சாலைப் பணிகள் என, பல்வேறு திட்டங்கள் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம். இத்திட்டங்களுக்கு உலக வங்கியில் மாநகராட்சி கடன் பெறக்கூடும்.வரும் நிதி ஆண்டில், பெங்களூரு மாநகராட்சி மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து, மார்ச் 15ம் தேதி துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் பெங்களூரின் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.இந்த கூட்டம் முடிந்த பின் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் அளிக்கப்படும். மார்ச் 20 அல்லது 21ல் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இம்முறை 17,000 முதல் 18,000 கோடி ரூபாயில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2020 செப்டம்பர் 10ம் தேதி, பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிந்தது. அதன்பின் இதுவரை தேர்தல் நடக்கவே இல்லை. நான்கு ஆண்டுகளாக அதிகாரிகளே பட்ஜெட் தாக்கல் செய்தனர். இம்முறையும் அதிகாரிகளே பட்ஜெட் தாக்கல் செய்வர். இதனால் மாஜி கவுன்சிலர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.தொடர்ந்து ஐந்தாவது முறை பட்ஜெட் தாக்கலுக்கு அதிகாரிகள் தயாராகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி