கடவுள் வந்தாலும் பெங்களூரை மாற்ற முடியாதா? சிவகுமார் கருத்துக்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு
பெங்களூரு: 'மேலே உள்ள கடவுள் இறங்கி வந்தாலும் பெங்களூரை மாற்ற முடியாது' என்று கருத்து கூறிய, துணை முதல்வர் சிவகுமாருக்கு கடும் எதிர்ப்பு வலுக்கிறது.பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் சிவகுமார் பேசுகையில், 'மேலே உள்ள கடவுள் இறங்கி வந்தாலும், இன்னும் மூன்று ஆண்டுகளில் பெங்களூரை மாற்ற முடியாது. எதிர்காலத்திற்காக இப்போது இருந்தே, பல திட்டங்களை வகுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.துணை முதல்வர், பெங்களூரு நகர வளர்ச்சி அமைச்சர் பதவியை கையில் வைத்து கொண்டு, மூன்று ஆண்டுகளில் பெங்களூரை மாற்ற முடியாது என்று, சிவகுமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அவரது கருத்துக்கு எதிர்க்கட்சியான பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதயம் காயம்
எதிர்க்கட்சி தலைவர் அசோக்:கடந்த இரண்டு ஆண்டுகளில் பெங்களூரின் வளர்ச்சி ஜீரோ. பள்ளங்கள் வடிவம் ஜீரோ போன்று இருப்பது போல, வளர்ச்சியும் ஜீரோவாக உள்ளது. நகரில் அனைத்து இடங்களிலும் குப்பை தேங்கி உள்ளது. மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசை கேட்டு கொள்கிறோம்.பெங்களூரை பிராண்டாக மாற்ற போவதாக கூறிவிட்டு, பிராடாக மாற்றி உள்ளார் சிவகுமார். அவரது கருத்து கெம்பே கவுடாவை நம்பும் மக்களின் இதயத்தை காயப்படுத்தி உள்ளது. பெங்களூரு மாபியாக்கள் கையில் சிக்கி உள்ளது. கடவுள் மட்டுமே பெங்களூரை காப்பாற்ற முடியும். தயவு செய்து பெங்களூரை சேர்ந்த அமைச்சர்களுக்கு, பொறுப்பு அமைச்சர் பதவியை, முதல்வர் கொடுக்கட்டும். தவறான எண்ணம்
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா:பெங்களூரு நகருக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள சிவகுமாரின் பங்களிப்பு என்ன என்று தெரியவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு, ஒரு ரூபாய் கூட நிதி கொடுக்கவில்லை.ஆனால் அவர் வளர்ச்சி பற்றி பேசுகிறார். சிக்க கூடாதவர் கையில் பெங்களூரு சிக்கி அல்லல்படுகிறது. பெங்களூரை காப்பாற்ற நாங்கள் போராடுவோம்.பா.ஜ., - எம்.எல்.சி., ரவி:கடவுள் வந்தால் கூட பெங்களூரை மாற்ற முடியாது என்று, சிவகுமார் கூறி இருப்பது பொறுப்பான பதவியில் இருப்பவர் கூறும் கருத்து இல்லை. கடவுளா உங்களிடம் லஞ்சம் வாங்க சொன்னார். உங்கள் எண்ணமே தவறாக உள்ளது. தவறான எண்ணம் உள்ளவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. பெங்களூரு மக்களை, கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். நிதி தர மாட்டார்
பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா:சிவகுமார் பெங்களூரு நகர அமைச்சராக இருக்கும் வரை, நகரின் வளர்ச்சிக்கு முதல்வர் சித்தராமையா ஒரு ரூபாய் கூட தர மாட்டார்.அவர்கள் இருவருக்கும் இடையிலான அதிகார மோதலால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நகரின் நிலைமை படுமோசமாக போய் விட்டது.முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி:பெங்களூரில் அதிக வரி கொடுக்கும் தொகுதி மஹாதேவபுரா. இந்த தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை. சிவகுமார் வேறு வேலைகளில் பிசியாக இருப்பதால், பெங்களூரு மீது அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. தயவு செய்து அவருக்கு பதிலாக, வேறு ஒருவரை பொறுப்பு அமைச்சராக நியமிக்க வேண்டும்.தொழிலதிபர் மோகன்தாஸ் பை:துணை முதல்வர் சிவகுமார் கருத்து, நிர்வாக தோல்வியை ஒப்புகொள்ளும் வகையில் உள்ளது. நகரின் வளர்ச்சியில் அவர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.மெட்ரோ பயணியர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. சக்தி வாய்ந்த அமைச்சரான சிவகுமாரால் எதுவும் செய்ய முடியவில்லை.பெங்களூரு நகரை மேம்படுத்த நல்ல, சுத்தமான நடைபாதைகள் அமைத்தால் மக்களுக்கு பயன் அளிக்கும் என்பதை ஏன் உங்களால் உறுதி செய்ய முடியவில்லை. தயவு செய்து மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தி, அனைவருக்கும் உதவுங்கள்.