உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஐஸ்வர்யா கவுடா மோசடி வழக்கில் காங்., - எம்.எல்.ஏ.,விடம் விசாரணை?

ஐஸ்வர்யா கவுடா மோசடி வழக்கில் காங்., - எம்.எல்.ஏ.,விடம் விசாரணை?

பெங்களூரு: முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என, நகைக்கடை உரிமையாளர்களை நம்ப வைத்து, கிலோ கணக்கில் நங்க நகைகள் பெற்று மோசடி செய்த ஐஸ்வர்யா கவுடாவுக்கு சொந்தமான கார், காங்., - எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி வீட்டில் இருந்ததால், இவரிடமும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.மாண்டியாவை சேர்ந்த ஐஸ்வர்யா கவுடா, பெங்களூரில் வசிக்கிறார். இவர் தன்னை முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என, நகைக் கடை உரிமையாளர்களை நம்ப வைத்து, கிலோ கணக்கில் தங்க நகைகள் வாங்கினார். இதற்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்தார். இவரிடம் ஏமாந்த தங்க நகைக்கடை உரிமையாளர் ஒருவர், பெங்களூரின் சந்திரா லே - அவுட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கார்கள் பறிமுதல்

போலீசாரும் வழக்கு பதிவு செய்து, ஐஸ்வர்யா கவுடாவை கைது செய்தனர். இவரிடம் இருந்து கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர், சுரேஷ் உட்பட காங்கிரசின் பல தலைவர்களின் பெயரை பயன்படுத்தி, பலரிடம் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிந்தது.மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் அவர் வாங்கிய விலை உயர்ந்த ஆடி, பென்ஸ், பார்ச்சூனர் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவருக்கு சொந்தமான பென்ஸ் கார், தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஏ.சி.பி., பரத் ரெட்டி, வினய் குல்கர்னியின் கார் ஓட்டுனர் வீரேஷ் தளவாயை வரவழைத்து விசாரணை நடத்தினார்.ஐஸ்வர்யா கவுடா, சில மாதங்களுக்கு முன், மஹாராஷ்டிராவுக்கு சென்றிருந்தார். அங்கிருந்து, பென்ஸ் காரில் தார்வாடில் உள்ள வினய் குல்கர்னி வீட்டுக்கு வந்தார்.

என்ன தொடர்பு?

அங்கு காரை விட்டு விட்டு, விமானத்தில் பெங்களூருக்கு திரும்பியதாக கார் ஓட்டுனர் விரேஷ் தளவாயி தெரிவித்துள்ளார். இந்த காரும் கூட மோசடி பணத்தில் வாங்கப்பட்டது தான்.ஐஸ்வர்யா கவுடா, வினய் குல்கர்னி வீட்டுக்கு செல்ல என்ன காரணம், இருவருக்கும் என்ன தொடர்பு, காரை இவரது வீட்டில் விட்டு சென்றது ஏன் என்பதை கண்டுபிடிப்பதில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். முதற் கட்டமாக கார் ஓட்டுனர் விரேஷ் தளவாயிடம் விசாரணை நடத்துகின்றனர். வரும் நாட்களில் வினய் குல்கர்னியிடமும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. இதனால் அவர் தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை