விஜயேந்திரா விவகாரத்தில் எத்னாலுக்கு பின்னடைவு
பெங்களூரு: கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று, கட்சியின் மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையில் ஒரு அணி உருவானது.இந்த அணியினர், விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து நீக்க, கடுமையான முயற்சிகளை எடுத்தனர்.மேலிட தலைவர்களையும் சந்தித்து பேசினர். தலைவர் பதவிக்கு விஜயேந்திராவுக்கு எதிராக போட்டியிட போவதாகவும், எத்னால் அறிவித்தார். ஆனால், எத்னால் நினைத்தபடி எதுவுமே நடக்கவில்லை.கட்சி மேலிட தலைவர்கள், விஜயேந்திராவுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் எத்னால் கடும் பின்னடைவை சந்தித்து உள்ளார். கட்சி மேலிடம் நோட்டீஸ் கொடுத்தது பற்றி நேற்று முன்தினம் ஊடகத்தினர் எழுப்பிய கேள்விக்கு, காட்டமாக பதில் அளித்து விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்தார். உண்டியலில் ஒரு லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தினார். பின், ஒரு ஆவணத்தை சாமுண்டீஸ்வரி அம்மன் முன் வைத்து வணங்கினார்.அந்த ஆவணம் மேலிடத்திற்கு அளிக்க வேண்டிய பதிலாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், எத்னாலின் சர்க்கரை ஆலை தொடர்பான ஆவணம் என்பது தெரிய வந்துள்ளது.