கால்நடை மருத்துவமனை நிலம் உத்தரவை வாபஸ் பெற்ற அரசு
பெங்களூரு: சாம்ராஜ்பேட்டில் 200 ஆண்டுகள் பழமையான கால்நடை மருத்துவமனை கட்டடம், அதை ஒட்டியுள்ள 2 ஏக்கர் நிலத்தை, சிறுபான்மையினருக்கு வழங்கும் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.சாம்ராஜ்பேட் குடியிருப்போர் சங்கம் மற்றும் வழக்கறிஞர் கிரிஷ் பரத்வாஜ் ஆகியோர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.அதில், '2024 பிப்., 26ல், சாம்ராஜ்பேட்டையின் சலவாதிபாளையா வார்டில் 200 ஆண்டுகள் பழமையான கால்நடை மருத்துவமனையும், மைசூரு சாலை அருகில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தையும், மவுலானா ஆசாத் / மொரார்ஜி தேசாய் உறைவிடப்பள்ளி கட்டுமானத்துக்காக, சிறுபான்மையினர் நல துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 200 ஆண்டுகளுக்கு முன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இதை, சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஒப்படைக்காமல், தொடர்ந்து கால்நடை மருத்துவமனை நடத்த வேண்டும். அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர்.இம்மனு, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அருண் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், '2024 பிப்., 26ல் அரசு வெளியிட்ட உத்தரவை, வாபஸ் பெறுவதாக, 2025 மார்ச் 4ம் தேதி, கால்நடை துறை, மீன்வள துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.