முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.10.27 லட்சம் கோடி ஈர்ப்பு: தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெருமிதம்
பெங்களூரு: ''உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 10.27 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் 6 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைப்பது உறுதி,'' என்று, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெருமிதத்துடன் கூறினார்.கர்நாடக தொழில் துறை சார்பில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கடந்த 11ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் துவக்கி வைத்தார்.இம்மாநாட்டில் 19 நாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். நான்கு நாட்கள் நடந்த மாநாடு நேற்று நிறைவு பெற்றது. அதிக ஆர்வம்
இந்நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேசியதாவது:பெங்களூரில் நான்கு நாட்கள் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 10 லட்சத்து 27 ஆயிரத்து 378 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் ஆறு லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி. சில மதிப்புமிக்க நிறுவனங்கள், நமது மாநிலத்தில் பெரிய தொகையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டின.தற்போது உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீடுகளில் 75 சதவீதம் பெங்களூரு வெளியே உள்ள பகுதிகளுக்கு செல்லும். மூலதனத்தின் 45 சதவீதம் வடமாவட்ட பகுதிகளுக்கு செல்லும்.ஜிந்தால் குழுமம் எரிசக்தி, சிமென்ட், இரும்பு மற்றும் துணை தொழில்களில் 1.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளது. பால்டேட்டா குழுமம் கொப்பாலில் 54,000 கோடி முதலீடு செய்து உள்ளது.ஷ்டைனர் எலக்ட்ரிக் நிறுவனம் மின்சார உபகரண உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கு 2,247 கோடி ரூபாயும்; வால்வோ நிறுவனம் 1,400 கோடி ரூபாயும்; சாப்ரான் நிறுவனம் ஏவியோகின்ஸ் உற்பத்திக்கு 225 கோடி ரூபாயும் முதலீடு செய்து உள்ளது. 2025 - 2030 புதிய தொழில் கொள்கையின் கீழ், 2 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.புதிய கொள்கையின் கீழ் துமகூரு, விஜயபுராவில் தொழில் பூங்கா அமைக்கப்படும். அரசின் லட்சிய திட்டமான குயின் சிட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது சுகாதாரம் தொடர்புடையது.எனது மாவட்டமான விஜயபுராவில் 42,000 கோடி ரூபாய்க்கு முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் வடமாவட்டங்களுக்கு இனி நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.இம்மாநாட்டை வெற்றி பெற வைத்ததற்காக சிறப்பாக பணியாற்றிய தொழில் துறை முதன்மை செயலர் செல்வகுமார், கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.நிறைவு விழாவில் கிரேக்க நாட்டின் முன்னாள் பிரதமர் ஜார்ஜ் பிராபெண்டியோ, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், கர்நாடக மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கலந்து கொண்டனர்.