உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தாய், மகள் கொலை வாலிபருக்கு ஆயுள்

தாய், மகள் கொலை வாலிபருக்கு ஆயுள்

பெங்களூரு: இளம் பெண்ணையும், அவரது 4 வயது மகளையும் கத்தியால் குத்தி கொன்றவருக்கு, ஆயுள் தண்டவை விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெங்களூரு, விஜயநகரில் வசிப்பவர் பாஸ்கர், 31. இவர் தனியார் நிறுவனத்தில் டெக்னீஷியனாக பணியாற்றினார். இவருக்கு ஆன்லைன் மூலம், யமுனா, 27 என்ற பெண் அறிமுகமானார். இவர் பேகூரின், சவுடேஸ்வரி லே - அவுட்டில் வசித்தார். தன் வீட்டிலேயே, கொழுப்பை கரைக்கும் ஆயுர்வேத மருந்து தயாரித்து விற்பனை செய்து வந்தார். மருந்து வாங்குவது போன்று, பாஸ்கர் அவ்வப்போது யமுனாவின் வீட்டுக்கு செல்வார்.இருவரும் மொபைல் எண்ணை பரிமாறி கொண்டு, நட்பாக பழகினர். 2021 அக்டோபர் 6ம் தேதி, பாஸ்கர் யமுனாவின் வீட்டுக்கு சென்றார். அவர் தனியாக இருப்பதை கவனித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். யமுனா எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதை பார்த்துவிட்ட அவரது 4 வயது மகளையும் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.இது குறித்து, விசாரணை நடத்திய பேகூர் போலீசாருக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பின், யமுனா வீட்டின் குளியலறையில் ரத்தக்கறை படிந்த பனியன் கிடைத்தது. ஒரு மொபைல் போனும் கிடைத்தது. இதை வைத்து பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரின் 50வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரணையில் பாஸ்கரின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ