எம்.எல்.ஏ.,க்களின் அறைகளுக்கு ரூ.3 கோடியில் ஸ்மார்ட் லாக்
பெங்களூரு: விதான்சவுதாவில் எம்.எல்.ஏ.,க்கள் உறங்குவதற்காக நாற்காலி வசதியை தொடர்ந்து, இவர்களின் அறைகளுக்கு 'ஸ்மார்ட் லாக்' வசதி செய்ய மூன்று கோடி ரூபாய் செலவிடுவது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.சட்டசபை கூட்டம் நடக்கும்போது, மதிய உணவுக்கு பின், எம்.எல்.ஏ.,க்கள் குட்டித்துாக்கம் போட, விதான்சவுதா வளாகத்தில் ஓய்வுநாற்காலி அமைக்க, சபாநாயகர் காதர் முடிவு செய்துள்ளார்.இதை தொடர்ந்து, 224 எம்.எல்.ஏ.,க்களின் அறைகளின் கதவுகளுக்கும் 'ஸ்மார்ட் லாக்' பொருத்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மூன்று கோடி ரூபாய் செலவிடவுள்ளது.பல்லாரி, பெலகாவி, ராய்ச்சூர் உட்பட பல இடங்களில் அரசு மருத்துவமனைகளில், குழந்தை பிரசவித்த பெண்கள்உயிரிழக்கின்றனர். கடந்தாண்டு மட்டுமே, 347 பெண்கள் இறந்ததாகசுகாதாரத்துறை புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.குழந்தை பெறும் பெண்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் எம்.எல்.ஏ.,க்கள் அபூர்வமாக தங்கும் எம்.எல்.ஏ.,க்கள் பவனின் அறைகளுக்கு, மூன்று கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் லாக்' போடும் நோக்கம் என்ன என, மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிரசவித்து, உயிரிழக்கும் பெண்களின் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்க, இந்த நிதியை பயன்படுத்தி இருக்கலாம். ஏற்கனவே பாதுகாப்பு உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் அறைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆஸ்கின் ஆட்டோமோஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம், ஸ்மார்ட் லாக் சிஸ்டம் வாங்குகின்றனர். இதற்கு மார்க்கெட் விலையை விட, கூடுதல் தொகை வழங்குவது, சந்தேகத்துக்கு இடமளிக்கிறது. எம்.எல்.ஏ.,க்கள் அறைகளின் பாதுகாப்பை பலப்படுத்த, ஸ்மார்ட் லாக் பொருத்துவதாக, நிதித்துறை கூறியுள்ளது.ஆனால் இந்த அறைகளில், அவர்கள் தங்கும் காலம் மிகக்குறைவு. அரசு வீண் செலவு செய்வதாக, பலரும் அதிருப்திதெரிவித்துள்ளனர்.