பல்லாரி: பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, டாக்டர் என, பொய் சொல்லி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். பல்லாரி மாவட்டம், சண்டூர் தாலுகாவின், தோரணகல்லு கிராமத்தில் வசிப்பவர் வீரேஷ், 35. இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். மருந்துகளை பற்றி, பலரிடம் தெரிந்து கொண்டு, தன்னை டா க்டர் என, பொது மக்களிடம் கூறி நம்ப வைத்தார். அதே கிராமத்தில் கிளினிக் திறந்து, டாக்டராக தொழில் நடத்தினார். தன்னிடம் வந்த நோயாளிகளுக்கு, ஏதோ சில மருந்துகளை கொடுத்து, பணம் சம்பாதித்தார். தவறான மருந்துகளை கொடுத்ததால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து, பொது மக்கள் பலரும் மாவட்ட சுகாதாரத்துறையில் புகார் அளித்தனர். புகாரின்படி சண்டூர் தாலுகா மருத்துவ அதிகாரி பரத் தலைமை யில், நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், நேற்று காலை கிராமத்துக்கு வந்து , வீரேஷின் கிளினிக்கில் சோதனை நடத்தினர். அவர் மருத்துவம் தொடர்பான, எந்த பட்டப்படிப்பும் படிக்காமல் டாக்டராக தொழில் செய்வது தெரிந்தது. கிளினிக்கை பூட்டி சீல் வை த்த அதிகாரிகள், போலி டாக்டர் வீரேஷை கைது செய்தனர். மருத்துவ அதிகாரி பரத் கூறியதாவது: பொது மக்கள் தனியார் கிளினிக்குக்கு, சிகிச்சைக்கு செல்லும் போது, கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, முறைப்படி மருத்துவம் படித்த டாக்டரிடம், சிகிச்சை பெற வேண்டும். கிராமங்களில் டாக்டர் தொழில் செய்வது தெரிந்தால், அவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்து, சிகிச்சை பெற வேண்டும். ஒரு வேளை அவர் போலி டாக்டர் என்றால், உடனடியாக சுகாதாரத்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். போலி டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.