கஞ்சா விற்க லஞ்சம் 11 போலீசார் சஸ்பெண்ட்
பெங்களூரு: லஞ்சம் வாங்கிக் கொண்டு, கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் உட்பட 11 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெங்களூரு, ஆர்.ஆர்.நகரில் கஞ்சா விற்று வந்த சாம்ராஜ்பேட்டின் சல்மான், சல்மான் கான், ஜே.ஜே.நகரின் நயாஸ் உல்லா, நயாஸ் கான், தாஹர் படேல் ஆகியோரை, கடந்த மாதம் 22ம் தேதி ஆர்.ஆர்.நகர் போலீசாருடன் இணைந்து சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, டைடல் - 100 மாத்திரைகள் 1,000 பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாத்திரைகளை போதை மாத்திரை என்று விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது. கைதான ஆறு பேரின் மொபைல் போன்களை வாங்கி, சி.சி.பி., போலீசார் ஆய்வு செய்தனர். அவர்களுடன் சாம்ராஜ்பேட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மஞ்சண்ணா, ஏட்டுகள் ரமேஷ், சிவராஜ், கான்ஸ்டபிள்கள் மதுசூதன், பிரசன்னா, சங்கர், ஆனந்த். ஜே.ஜே.நகர் போலீஸ் நிலைய உதவி எஸ்.ஐ., குமார், ஏட்டு ஆனந்த், கான்ஸ்டபிள்கள் பசனகவுடா, நிகில் ஆகிய 11 பேரும் தொடர்பில் இருப்பது தெரிந்து, அதிர்ச்சி அடைந்தனர். கஞ்சா விற்றோர் நடத்திய பார்ட்டிகளில் 11 பேரும் பங்கேற்றதும் தெரிந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களும் மொபைல் போன்களில் இருந்தன. கைதானோருக்கும், இன்ஸ்பெக்டர் உட்பட 11 போலீசாருக்கும் என்ன தொடர்பு என்று விசாரிக்க, பேட்ராயனபுரா உதவி போலீஸ் கமிஷனர் பரத் ரெட்டி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் அறிக்கை தாக்கல் செய்தார். கஞ்சா விற்றதாக கைதான ஆறு பேரும், இன்ஸ்பெக்டர் உட்பட 11 பேருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்பில் இருப்பதும் சாம்ராஜ்பேட், ஜே.ஜே.நகர் பகுதிகளில் கஞ்சா விற்கும்போது கைது செய்யாமல் இருக்க, லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதும், நேரடியாக லஞ்சம் வாங்காமல் உறவினர்கள் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்ப கூறியது பற்றியும், அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மஞ்சண்ணாவை சஸ்பெண்ட் செய்து, போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று உத்தரவிட்டார். மற்ற 10 போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து, மேற்கு மண்டல டி.சி.பி., கிரிஷ் உத்தரவு பிறப்பித்தார்.