கஞ்சா வைத்திருந்த 11 மாணவர்கள் கைது
மங்களூரு: அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற, கேரளாவை சேர்ந்த 11 கல்லுாரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மங்களூரு அட்டாவர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அட்டவார் எஸ்.ஐ., ஷீத்தல் அழகூருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நேற்று காலையில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 கிலோ 264 கிராம் கஞ்சா, 2,000 ரூபாய் மதிப்பிலான இரண்டு எடை இயந்திங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ய முயன்றதாக, 22 முதல் 25 வயது வரையிலான கேரளாவின் அத்யாத் ஸ்ரீகாந்த், முகமது அப்ரீன், முகமது சமனீத், நிபின் குரியன், முகமது, முகமது ஹனான், முகமது ஷாமில், அருண் தாமஸ், முகமது நிஹால், முகமது ஜாசில், சிதன் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். கைதானவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது.