12 கார், 8 ஆட்டோ உடைப்பு 4 போதை நபர்கள் கைது
பொம்மனஹள்ளி: பா.ஜ., - எம்.எல்.ஏ., சதீஷ் ரெட்டியின் வீட்டின் பின்பக்க சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 12 கார்கள், 8 ஆட்டோக்கள் கண்ணாடியை உடைத்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு, பொம்மனஹள்ளி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சதீஷ் ரெட்டி. இவரது வீடு ஹொங்கசந்திரா ராஜ்குமார் சாலையில் உள்ளது. இந்த வீட்டின் பின்பக்கம் உள்ள சாலையில், நேற்று முன்தினம் இரவு 12 வாடகை கார்கள், 8 ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.கார், ஆட்டோக்களின் டிரைவர்கள் நேற்று காலை வந்தபோது, வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தகவல் அறிந்த பொம்மனஹள்ளி போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நான்கு பேர், கார்கள், ஆட்டோக்களின் கண்ணாடியை கட்டையால் அடித்து நொறுக்குவது தெரிந்தது.இந்த காட்சியின் அடிப்படையில் ஹொங்கசந்திராவின் அருண், சாகர், சதீஷ், மரியப்பா ஆகிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். குடிபோதையில் வாகனங்கள் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது.பாதிக்கப்பட்ட டிரைவர்கள் கூறுகையில், 'எங்கள் வாகனங்களை நிறுத்த வேறு இடம் இல்லை. 'இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்தது இல்லை. மீண்டும் இதுபோன்று நடக்காமல் தடுக்க, இப்பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் அதிக நேரம் ஈடுபட வேண்டும்' என்றனர்.