12 லட்சம் பி.பி.எல்., ரேஷன் அட்டைகள் ரத்து?
பெங்களூரு : கர்நாடகாவில் தகுதியற்றவர்கள் பயன்படுத்தும், 12 லட்சம் பி.பி.எல்., ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக எட்டு லட்சம் தகுதியற்றவர்களின் பட்டியல், ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளன. கர்நாடகாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, பி.பி.எல்., ரேஷன் அட்டைகளும், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஏ.பி.எல்., ரேஷன் அட்டைகளும் வழங்கப்படுகின்றன. பி.பி.எல்., ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு, அரசின் சலுகைகள் தாராளமாக கிடைக்கின்றன. இதனால் பி.பி.எல்., கார்டுகளை பெற பணக்காரர்களும் முயற்சிக்கின்றனர். உணவு துறை ஊழியர்கள், தரகர்களுக்கு லஞ்சம் கொடுத்து, சட்டவிரோதமாக பி.பி.எல்., கார்டுகளை வாங்கியுள்ளனர். மாநிலத்தில் லட்சக்கணக்கானோர், பி.பி.எல்., ரேஷன் அட்டைகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதால், தகுதியானவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அத்துடன் அரசுக்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இது, அரசின் கவனத்திற்கு சென்றது. இதுபற்றி உணவு துறை அதிகாரிகளுடன், அந்த துறையின் அமைச்சர் முனியப்பா ஆலோசனை நடத்தினார். தகுதியற்ற பி.பி.எல்., ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. மாநிலத்தில் 12 லட்சம் பேர் சட்டவிரோதமாக பி.பி.எல்., அட்டைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 8 லட்சம் பேரின் பி.பி.எல்., அட்டைகள் அதிரடியாக ரத்து செய்யப்பட உள்ளன. பி.பி.எல்., ரேஷன் அட்டைகளை சட்டவிரோதமாக வாங்கியவர்களின் பெயர் பட்டியல், பெங்களூரில் சில ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளன. இவர்களது வீடுகளுக்கு உணவு துறை அதிகாரிகள், ஊழியர்கள் விரைவில் செல்ல உள்ளனர். ரேஷன் அட்டையை ரத்து செய்வதுடன், அபராதம் விதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து உணவு அமைச்சர் முனியப்பா நேற்று கூறுகையில், ''தென்மாநிலங்களில் கர்நாடகாவில் தான் 75 சதவீதம் பி.பி.எல்., ரேஷன் அட்டைகள் உள்ளன. தகுதியற்ற பி.பி.எல்., ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய மாட்டோம். ஏ.பி.எல்., ரேஷன் அட்டைகளாக மாற்றுவோம்,'' என்றார்.