14 வங்கதேசத்தவருக்கு சான்று வசமாக சிக்கினார் டாக்டர்
பெங்களூரு: வங்கதேசத்தைசச சேர்ந்த, 14 பேரின் ஆவணங்களை முறையாக சரிபார்க்காமல், அவர்களுக்கு ஆதார், பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை சான்றளித்தது தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய, அரசு டாக்டரின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. பெங்களூரைச் சேர்ந்தவர் டாக்டர் லோகேஷ். அரசு மருத்துவமனையில் டாக்டராகவும், ஆவணங்களை சான்றளிக்க அதிகாரம் பெற்ற அரசிதழ் அதிகாரியாகவும் உள்ளார். கடந்த, 2017ல் வங்கதேச நாட்டைச் சேர்ந்த, 14 பேருக்கு ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் வழங்க, கையெழுத்திட்டிருந்தார். பெங்களூரில் உள்ள யு.ஐ.டி.ஏ.ஐ., எனும் இந்திய தனி அடையாள ஆணையத்தின் துணை இயக்குநர், பெல்லந்துார் போலீசில் புகார் அளித்தார். அதில், வங்க தேசத்தினர், 14 பேர் சமர்ப்பித்த முகவரி, அடையாள சான்றுகள், அவற்றுடன் இணைக்கப்பட்ட துணை ஆவணங்களை சரிபார்க்காமலேயே, டாக்டர் லோகேஷ் சான்றிதழ் அளித்து உள்ளார். இதன் மூலம், அவர்கள் தங்களை இந்திய குடிமக்களாக காட்டிக் கொள்ள, ஆதார் அட்டைகளையும், பிற ஆவணங்களையும் பெறுவதற்கு வழிவகுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, டாக்டர் லோகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கை, பெருநகர மாஜிஸ்டிரேட் நீதிமன்றம், 2020ல் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த உத்தரவையும், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்ய வேண்டும் என, 2021ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி சந்தோஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் டாக்டர் லோகேஷ் தரப்பு வக்கீல் வாதிட்டதாவது: விசாரணை ஆவணங்களை முழுமையாக படிக்காமல், இயந்திரத்தனமாக இவ்வழக்கை விசாரணைக்கு நீதிபதி ஏற்றுக் கொண்டார். குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 197ன் கீழ், அரசு ஊழியர்கள், தங்களின் அலுவல் கடமைகள் தொடர்பான செயலுக்காக, அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட உயரதிகாரியிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும். சம்பந்தப்பட்ட விபரங்களுக்கான ஆதாரங்களை காட்டிய பின்னரே, ஆவணங்களுக்கு லோகேஷ் சான்றிதழ் அளித்தார். தேவையான அனுமதி இல்லாமல், அவர் மீது வழக்கு தொடர முடியாது. இவ்வாறு அவர் கூறினார். வக்கீலின் வாதத்தை நிராகரித்து, நீதிபதி சந்தோஷ் நேற்று கூறியதாவது: குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 197ன் கீழ், குற்றம்சாட்டப்பட்ட செயல், கடமைகளை நிறைவேற்றுவதுடன், நேரடியாக தொடர்பு உடையதா என்பதை பொறுத்து தான் முன் அனுமதி தேவைப்படும். சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர் களுக்கு ஆதரவாக, ஆவண ஆதாரங்களை சரிபார்க்காமல், அந்த ஆவணங்களுக்கு சான்றளிப்பது பொது கடமை அல்ல. குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை நடத்த வேண்டும். எனவே, டாக்டர் லோகேசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கையை தொடரலாம். இவ்வாறு அவர் தன் உத்தரவில் கூறினார்.