கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 14 பேர் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம்
பெங்களூரு : சின்னசாமி மைதானத்தின் முன்பு ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களில் 14 பேர், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.ஆர்.சி.பி., அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது, பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் முன்பு ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து விசாரிக்க அரசு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதலில் உத்தரவிட்டது. பின், நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. மாஜிஸ்திரேட் விசாரணை, பெங்களூரு நகர கலெக்டர் ஜெகதீஷ் தலைமையில் நடந்து வருகிறது. மைதானத்திற்கு சென்று ஆய்வு செய்தார். கப்பன் பார்க் போலீசாரிடம் இருந்தும் தகவல் பெற்று கொண்டார். இந்நிலையில் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்கள் தனது முன்பு, ஆஜராகி சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிக்கலாம் என்று, ஜெகதீஷ் அறிவித்தார். இதன்படி கே.சி., ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு, கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 14 பேர் நேற்று வந்தனர். ஜெகதீஷ் முன்பு ஆஜராகி கடந்த 4 ம் தேதி நடந்தது என்ன என்பது பற்றி வாக்குமூலம் அளித்தனர். இந்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் அரசு, ஆர்.சி.பி., நிர்வாகம் மீது குற்றச்சாட்டு கூறி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.