பாதுகாப்பு வசதிகள் இல்லாத 140 ஆம்னி பஸ்கள்... பறிமுதல்!: ஆந்திரா விபத்தால் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அதிரடி
வேறு மாநிலங்களில் இருந்து, பெங்களூருக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்கள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை. அவ்வப்போது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி, அபராதம் வசூலிக்கின்றனர். மற்றபடி கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இப்போது பஸ்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதற்கு காரணம், ஆந்திராவில் ஏற்பட்ட விபத்தாகும். 19 பேர் பலி அக்டோபர் 24ம் தேதி, ஹைதராபாதில் இருந்து, பெங்களூருக்கு வந்த ஆம்னி பஸ், கர்னுால் அருகில் விபத்தில் சிக்கியது. 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஆந்திராவில் நடந்த சம்பவத்தால், கர்நாடக போக்குவரத்துத்துறை எச்சரிக்கை அடைந்துள்ளது. தனியார் பஸ்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ஆம்னி பஸ்கள் முறைப்படி பர்மிட் பெற்றுள்ளனவா, வரி செலுத்தியுள்ளனவா என்பதை மட்டுமே, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வரி செலுத்தாமல் இயங்கினால் வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதித்தனர். தற்போது பஸ்களில் பயணியருக்கு தேவையான, பாதுகாப்பு சாதனங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்படி, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதன்படி அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழு அதிகாரிகள், பெங்களூரு புறநகரிலேயே தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி, ஆய்வு செய்கின்றனர். முதலுதவி பெட்டி தீ விபத்து, சாலை விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படும்போது, பயணியர் வெளியேற அவசர கதவு உள்ளதா, தீ விபத்தை கட்டுப்படுத்தும் சாதனம், முதலுதவி சிகிச்சை பெட்டி உள்ளதா என்பதை தெரிந்து கொள்கின்றனர். பயணியரை அழைத்துச் செல்லும் பஸ்களில், சட்ட விரோதமாக சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதையும், சோதனை நடத்துகின்றனர். அக்டோபர் 25 முதல் நேற்று வரை 4,490 ஆம்னி பஸ்கள் சோதனையிடப்பட்டன. இதில் வரி ஏய்ப்பு, பயணியருக்கு பாதுகாப்பு வசதி செய்து கொடுக்காத 140 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 21 மாவட்டங்கள் இதுகுறித்து, பெங்களூரு வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஓம்காரேஸ்வரி கூறியதாவது: ஆந்திராவில் நடந்த அசம்பாவிதம், நமக்கும் பாடமாக அமைந்துள்ளது. வரி ஏய்ப்பு, பயணியருக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தாத, ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். இதற்கு முன்பு அத்திப்பள்ளி, தேவனஹள்ளி சுங்கச்சாவடிகளில் சோதனை நடத்தினோம். நேற்று நெலமங்களா சுங்கச்சாவடி அருகில் சோதனை நடத்தினோம்.இந்த சோதனை சாவடி 21 மாவட்டங்களை, பெங்களூருடன் இணைக்கும் முக்கிய பகுதி. வரி ஏய்ப்பு, பாதுகாப்பு வசதி இல்லாத 41 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தியதால் மூன்று பஸ்களை விடுவித்தோம். மேலும் 38 பஸ்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த பஸ்களில் வந்த பயணியருக்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்க, 15 பி.எம்.டி.சி., பஸ்களை கொண்டு சென்றோம். அந்த பஸ்களில் பயணியர் பெங்களூரு அழைத்து வரப்பட்டனர். இதுவரை கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் வசூலித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.