கான்ட்ராக்டர் கொலை வழக்கு 2 குற்றவாளிகள் சுட்டு பிடிப்பு
ஹாவேரி:கான்ட்ராக்டர் சிவானந்த குன்னுார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை, போலீசார் சுட்டு பிடித்தனர்.சில நாட்களுக்கு முன்பு, ஹாவேரி நகரில் கான்ட்ராக்டர் சிவானந்த குன்னுார், 40, நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நாகராஜ் சவுதட்டி, ஹனுமந்தா, அஷ்ரப், சுதீப், சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவானது.இவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்திருந்தனர். ஐந்து பேரும், ஹனகலில் உள்ள கொண்டோஜி கிராஸ் அருகில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று அதிகாலை இவர்களை பிடிக்க சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சத்யப்பா மல்கொண்டா, எஸ்.ஐ., சம்பத், ஏட்டுகள் ராஜு, ஹரிஷ் ஆகியோர் சென்றனர். போலீசார் வருவதை பார்த்த நாகராஜ், அஷ்ரப் ஆகியோர், போலீசாரை தாக்கினர். துப்பாக்கியால் சுட்டுவிடுவோம் என்று எச்சரித்தும் கேட்காததால், தற்காப்புக்காக, இருவரின் கால்களிலும் போலீசார் சுட்டனர்.இதை பார்த்த மற்ற மூவரும் போலீசாரிடம் சரணடைந்தனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த போலீஸ், குற்றவாளிகள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின் தீவிர சிகிச்சைக்காக, ஹூப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.சிவானந்த குன்னுாருடன் ஏற்பட்ட நில விவகாரத்தால் அவரை கொலை செய்ததை நாகராஜ் ஒப்புக் கொண்டதாக, மாவட்ட எஸ்.பி., அன்சு குமார் தெரிவித்தார்.