பைக் மோதியதை தட்டி கேட்ட பயணியை தாக்கிய 2 பேர் கைது
சர்ஜாபூர்: பைக் மோதியதை தட்டி கேட்டதால், பயணியை தாக்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூரு அத்திப்பள்ளி சோதனை சாவடிக்கு அருகில் உள்ள, ஹோட்டல் முன் கடந்த 12ம் தேதி தமிழக அரசு பஸ் நின்றது. பஸ்சில் இருந்து இறங்கிய பயணி, ஹோட்டலுக்கு சென்றனர். அந்த வழியாக வேகமாக வந்த பைக், பயணி மீது மோதியது. இதில் அவர் காயம் அடைந்தார். பைக்கில் வந்த இருவரை, பயணி தட்டி கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து பயணியை தாக்கி விட்டு தப்பினர். இதை பஸ்சில் இருந்தவர், மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வீடியோ வேகமாக பரவிய நிலையில், அத்திப்பள்ளி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். வீடியோவில் இருந்த பைக் வாகன பதிவெண்ணை வைத்து, ஹெப்பகோடியின் சரண், 25, மதன்குமார், 25 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.