தப்பியோடிய 2 திருடர்கள் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
தார்வாட்: வீடுகளில் திருட வந்து, தப்பியோட முயற்சித்த இருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதுகுறித்து, ஹூப்பள்ளி - தார்வாட் நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், அளித்த பேட்டி: தார்வாடின், கிரிநகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு துார்தர்ஷன் ஊழியர் ஒருவர், பணி முடிந்து பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். ஆயுதங்கள் வைத்திருந்த மூன்று கொள்ளையர்கள், அவரை வழிமறித்து வழிப்பறி செய்ய முயற்சித்தனர். அவர் பைக்கை வேகமாக ஓட்டி, அவர்களிடம் இருந்து தப்பி வந்து, வித்யாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். அவர்களில் ஹுசேன் சாப் கனவள்ளி என்பவரை பிடித்தனர். அவரிடம் விசாரித்ததில், கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் நடந்த 35க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில், இவர் தேடப்படுவது தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்படி, கூட்டாளிகள் தங்கியிருந்த இடத்துக்கு போலீசார் சென்றனர். ஹுசேன் சாப் கனவள்ளி, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். மற்ற இருவரும் போலீசாரை தாக்க முற்பட்டனர். இவ்வேளையில் எஸ்.ஐ., மல்லிகார்ஜுன் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனால், அவர்கள் தப்பியோட முயன்றனர். எஸ்.ஐ., மல்லிகார்ஜுன், தற்காப்புக்காக சுட்டதில் கொள்ளையர்கள் விஜய் அன்னகேரி, 30, முஜம்மில் சவுதாகர், 35, ஆகியோரின் காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கொள்ளையரால் தாக்கப்பட்டு காயமடைந்த எஸ்.ஐ., மல்லிகார்ஜுன், ஏட்டு இஷாக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.