உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தார்வாடில் கடத்தப்பட்ட 2 மாணவர்கள் சில மணி நேரத்தில் ஜொய்டாவில் மீட்பு

 தார்வாடில் கடத்தப்பட்ட 2 மாணவர்கள் சில மணி நேரத்தில் ஜொய்டாவில் மீட்பு

தார்வாட்: பள்ளியில் உணவு சாப்பிட்டு விட்டு அமர்ந்திருந்த இரு மாணவர்களை, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் கடத்தி சென்ற சில மணி நேரத்தில் மீட்கப்பட்டனர். தார்வாட் மாவட்டம் கமலாபூர் பள்ளியில் நேற்று மதியம் 2:30 மணியளவில் மாணவர்கள் உணவு சாப்பிட்ட பின் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர், அங்கிருந்த இரு மாணவ - மாணவியை, தனது பைக்கில் அமர்த்தி அழைத்து சென்றார். 78 கி.மீ., தொலைவில் உள்ள உத்தர கன்னடா மாவட்டம் ஜொய்டாவில், மர்ம நபர் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதை பார்த்த அப்பகுதியினர், மர்மநபரையும், குழந்தைகளை மீட்டனர். அப்போது மாணவ - மாணவியரிடம், 'எந்த பகுதியை சேர்ந்தவர்கள், மர்ம நபர் உங்கள் தந்தையா' என்று அங்கிருந்தவர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும், 'இவர் யார் என்று எங்களுக்கு தெரியாது. எங்களை வலுக்கட்டாயமாக, இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தார்' என்றனர். இதை கேட்ட அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஜொய்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த அவர்கள், மாணவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். படுகாயம் அடைந்த மர்ம நபரை மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்தனர். இதற்கிடையில், பள்ளிக்கு சென்ற குழந்தைகளை மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற தகவல் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், தார்வாட் துணை நகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, ஜொய்டா வழியாக செல்வது தெரிந்தது. அதேவேளையில், ஜொய்டா போலீசார், தார்வாட் துணை நகர போலீசாரை தொடர்பு கொண்டு, இரு மாணவர்கள் குறித்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார், மாணவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததுடன், கடத்திய நபரை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அனைத்தும் சில மணி நேரத்துக்குள் நடந்து முடிந்துள்ளது. குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை