விஷவாயு தாக்கி 2 தொழிலாளி பலி
மங்களூரு: சுரத்கல்லில் உள்ள, ரிபைனரி அண்ட் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் தொழிற்சாலையில், விஷ வாயு கசிந்து இரண்டு தொழிலாளர்கள் உயிர் இழந்தனர்.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு புறநகரின் சுரத்கல்லில், 'ரிபைனரி அண்ட் பெட்ரோ கெமிக்கல்' தொழிற்சாலை உள்ளது. தொழிற்சாலையின் ஆயில் மூவ்மென்ட் சர்வீஸ் பிரிவில், பழுது ஏற்பட்டிருந்தது. இதை சரி செய்வதற்காக, தொழிலாளர்கள் தீப் சந்திர பார்த்தியா, 33, பிஜில் பிரசாத், 33, நேற்று காலையில் டேங்கின் மேற் கூரைக்கு சென்றனர்.அப்போது விஷவாயு தாக்கியதில், இருவரும் பாதிக்கப்பட்டு மயங்கினர். இவர்களை காப்பாற்ற சென்ற விநாயகா மயகேரியும், விஷ வாயுவை சுவாசித்து மயங்கினார். இவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, தீப் சந்திர பார்த்தியா, பிஜில் பிரசாத் உயிரிழந்தனர். விநாயகா மயகேரி, மங்களூரின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.தீப் சந்திர பார்த்தியா, பிரயாக்ராஜையும்; பிஜில் பிரசாத் கேரளாவையும் சேர்ந்தவர். நடந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்த தொழிற்சாலை நிர்வாகம் உயர் மட்ட குழு அமைத்துள்ளது.சம்பவம் நடந்த தொழிற்சாலையை, கூடுதல் கலெக்டர் சந்தோஷ் குமார், நேரில் ஆய்வு செய்தார். தொழிற்சாலை நிர்வாக இயக்குனருடன் ஆலோசனை நடத்தினார். இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்க வேண்டும். இனிமேல் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல், தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.