ரவுடி கொலையில் 20 பேர் கைது
தாவணகெரே : தாவணகெரேவில் ரவுடியாக வலம் வந்தவர் சந்தோஷ் குமார் என்ற கனுமா. இவரை, கடந்த 5ம் தேதி, கிளப்பில் அவரது நண்பர்கள் சாவலி சந்தோஷ் உட்பட எட்டு பேர் வெட்டி கொலை செய்தனர்.இது சம்பந்தமாக கனுமாவின் மனைவி ஸ்ருதி, வித்யா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கு அடுத்த நாள் ஹொலல்கெரே போலீஸ் நிலையத்தில் சாவலி சந்தோஷ், 30, உட்பட பத்து பேரும் சரண் அடைந்தனர்.சாவலி சந்தோஷிடம் தீவிரமாக விசாரணை நடந்தது. இம்மாதம் 8ம் தேதி ஆவரகெரேயில் நடந்த விசாரணையின் போது, போலீசாரை தாக்கிவிட்டு சந்தோஷ் தப்ப முயன்றார். அப்போது, அவரது காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.எஸ்.பி., உமா பிரசாத் கூறியதாவது:இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தோஷிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இதுவரை மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. கனுமாவுக்கும், சாவலி சந்தோஷுக்கும் ஏற்பட்ட பண பிரச்னை உட்பட முன் விரோதத்தால் கொலை நடந்து உள்ளது. முழு விபரமும் விசாரணை முடிந்த பின்னர் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.