2,000 புதிய ஓட்டுநர்கள் நியமனம்; ஜூன் முதல் வாரம் பணிக்கு ஆஜர்
பெங்களூரு : கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் ஐந்து ஆண்டுகளாக காலியாக இருந்த ஓட்டுநர் நியமனம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் முதல் வாரம் 2,000 புதிய ஊழியர்கள் பணிக்கு ஆஜராக உள்ளனர்.இது குறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு 2,545 ஓட்டுநர்கள் நியமனத்துக்கு, 2020ல் உத்தரவு வெளியிடப்பட்டது. முதற் கட்டமாக 1,200 ஓட்டுநர்கள், 746 மெக்கானிக் பணியிடங்கள் நிரப்ப, விண்ணப்பம் கோரப்பட்டது. ஆனால், அதன்பின் நியமன செயல்பாடு நிறுத்தப்பட்டன. 25,494 விண்ணப்பம்
இன்றைய அரசு, 2023 அக்டோபரில், கே.எஸ்.ஆர்.டி.சி., ஓட்டுநர்கள் நியமனத்தை மீண்டும் துவக்கியது. 2,545க்கு பதிலாக 2,000 ஓட்டுநர் கம் நடத்துநர்கள்; 746 மெக்கானிக்குகளுக்கு பதில், 300 மெக்கானிக்குகளை நியமிக்க அரசு அனுமதி அளித்தது. 2,000 பணியிடங்களுக்கு 25,494 பேர் விண்ணப்பித்தனர்.விண்ணப்பங்களை ஆய்வு செய்த போது, 13,954 பேர் தகுதி பெற்றிருந்தனர். ஹும்னாபாத், ஹாசனின் கே.எஸ்.ஆர்.டி.சி., பயிற்சி மையத்தில், ஓராண்டாக ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது. 12,431 பேர் பயிற்சிக்கு ஆஜராகினர்.இவர்களில் 7,352 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இட ஒதுக்கீடு அடிப்படையில், அந்தந்த பிரிவுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.நியாயமான முறையில் தேர்வு நடத்தப்பட்டது. ஓட்டுநர் பயிற்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய கட்டுப்பாட்டு அறை மூலம், அனைத்தும் கண்காணிக்கப்பட்டது.ஓட்டுநர் பயிற்சி பாதைகள் மற்றும் பஸ்சில் 48 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. முதன் முறையாக, ஓட்டுநர் பயிற்சி தேர்வு தொடர்பாக, ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்வு கடினமாக இருந்ததாக, சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர். நெறிமுறைகள்
ஓட்டுநர் பணி என்பது மிகவும் முக்கியமானது. வரும் நாட்களில் எந்த விபத்துகளும் நடக்காமல் பார்த்து கொள்வது அவசியம். எனவே ஓட்டுநர் பயிற்சி நெறிமுறைகள், கடுமையாக பின்பற்றப்பட்டன.தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வசதியாக, ஹாசனிலும்; வட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வசதியாக ஹும்னாபாத்திலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.இந்த இரண்டில் விருப்பமான மையங்களில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. தினமும் 100 முதல் 120 பேருக்கு பயிற்சி தேர்வு நடத்தப்பட்டது. அதே நாளன்று மாலையில், மதிப்பெண் பட்டியல் கே.எஸ்.ஆர்.டி.சி., வெப் சைட்டில் வெளியிடப்பட்டது.பயிற்சி முடிந்துள்ளதால், ஓட்டுநர்கள் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். ஜூன் முதல் வாரம் 2,000 புதிய ஓட்டுநர்கள் கே.எஸ்.ஆர்.டி.சி., பணியில் சேர உள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.