உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் 2வது விமான நிலையம்; இடங்கள் ஆய்வுக்கு வருகிறது மத்திய குழு

பெங்களூரில் 2வது விமான நிலையம்; இடங்கள் ஆய்வுக்கு வருகிறது மத்திய குழு

பெங்களூரு,; ''பெங்களூரு அருகில் நெலமங்களா - குனிகல் சாலை அல்லது கனகபுராவில் இரண்டாவது விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான இடத்தை பார்வையிட இந்த வாரம் மத்திய குழுவினர் வருகை தருகின்றனர்,'' என, மாநில கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரு அருகில் குனிகல் - நெலமங்களா மற்றும் கனகபுரா என இரு இடங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க இடங்கள் கண்டறிந்து உள்ளோம்.இவ்விரு இடங்களையும் பார்வையிட, இவ்வாரம் மத்திய குழுவினர் வருகை தருகின்றனர். அவர்கள் வந்தவுடன் அனைத்திற்கும் 'ஓகே' சொல்லிவிட மாட்டார்கள். இரு இடங்களை பார்வையிட்டு, சாதக, பாதகங்களை ஆய்வு செய்வர்.இதுபோன்று பெலகாவி, ஹூப்பள்ளியிலும் சர்வதேச விமான நிலையம் கட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் வருகின்றன. இது தொடர்பாக வரும் நாட்களில் ஆய்வு செய்யப்படும். விமான நிலையம் கட்டப்படும் இடத்தில் இருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு செல்லும் வகையில் இருக்க வேண்டும்.எம்.எல்.ஏ., ஜெயசந்திரா ஆசைப்படி, சிரா - சித்ரதுர்கா இடையே மாவட்ட விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அமைச்சரவை மாற்றும் விஷயத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும். எப்போது மாற்ற வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வர். ஊடகத்தில் தான் முதல்வர் மாற்றம் குறித்து பேசுகின்றனர். அது பற்றி எனக்கு தெரியாது.மாநில தலைவர் பதவிக்கு அமைச்சர்கள் ஈஸ்வர் கன்ட்ரே, சதீஷ் ஜார்கிஹோளி இருவரும் தகுதியானவர்கள். இதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.மாநில தலைவராக பொறுப்பேற்கும் எனக்கு விண்ணப்பம் எதுவும் வரவில்லை; நானும் தலைவர் பதவி கேட்கவில்லை. என் துறை பணிகளில் தீவிரமாக இருக்கிறேன்.காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் என்று கூறி பா.ஜ.,வினர், 'மக்கள் ஆக்ரோஷ போராட்டம்' நடத்துகின்றனர். ஆனால் பா.ஜ., ஆட்சி காலத்தில், கொரோனா ஊழல் தொடர்பாக, நாங்கள் மட்டுமல்ல, அக்கட்சியின் பசனகவுடா பாட்டீல் எத்னாலே ஊழல் புகார் கூறினார். பா.ஜ.,வில் நுாற்றுக்கணக்கான பிரச்னைகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை