யானைகளுக்கு 2வது கட்ட பயிற்சி
மைசூரு: ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் யானைகள், பீரங்கி குண்டு சத்தம் கேட்டு மிரளாமல் இருக்க, இரண்டாவது கட்ட பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலம், அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது. சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து வர, அதை பின்தொடர்ந்து 13 யானைகள் செல்லும். ஜம்பு சவாரியை மைசூரு அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் நின்று, முதல்வர் சித்தராமையா துவக்கி வைப்பார். சாமுண்டீஸ்வரி சிலை மீது மலர் துாவியதும், பீரங்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்கப்படும். பின், ஜம்பு சவாரி ஊர்வலம் துவங்கும். பீரங்கி குண்டு சத்தம் கேட்டு, யானைகள் மிரளாமல் இருக்க, யானைகள், குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். கடந்த வாரம் முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று இரண்டாவது கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. பீரங்கி குண்டுகள் முழங்கியபோது யானைகளும், குதிரைகளும் எந்த அசைவும் இன்றி கம்பீரமாக நின்றன. அடுத்த வாரம் 3வது கட்டமாக பீரங்கி குண்டுகளை வெடித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.