உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எம்.எல்.ஏ., முனிரத்னா மீதான 2வது பலாத்கார வழக்கு ரத்து

எம்.எல்.ஏ., முனிரத்னா மீதான 2வது பலாத்கார வழக்கு ரத்து

பெங்களூரு: பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீதான, இரண்டாவது பலாத்கார வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 61. இவர் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ககலிபுராவை சேர்ந்த 40 வயது பெண் பலாத்கார புகார் அளித்தார். ககலிபுரா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது. இந்த ஆண்டின் மே 20ம் தேதி, பீன்யாவை சேர்ந்த 40 வயது பா.ஜ., தொண்டர், முனிரத்னா மீது ஆர்.எம்.சி., யார்டு போலீஸ் நிலையத்தில் பலாத்கார புகார் செய்தார். முனிரத்னா மீது இரண்டாவது பலாத்கார வழக்குப் பதிவானது. இரு வழக்குகளையும் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. இரண்டாவது பலாத்கார வழக்கில், முனிரத்னாவுக்கு எதிரான சாட்சியங்கள் எதுவும், எஸ்.ஐ.டி.,க்கு கிடைக்கவில்லை. இதனால், 'இந்த வழக்கில் முனிரத்னா, அவரது ஆதரவாளர்கள் வசந்த், சென்னகேசவா, கமல் குற்றமற்றவர்கள்' என, கடந்த 4ம் தேதி மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., அறிக்கை தாக்கல் செய்தது. முன்னதாக தன் மீது பதிவான இரண்டாவது பலாத்கார வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முனிரத்னா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி அருண் விசாரித்து வந்தார். நேற்று நடந்த விசாரணையின்போது, முனிரத்னா தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மனுதாரர் குற்றமற்றவர் என்று, எஸ்.ஐ.டி., தாக்கல் செய்த அறிக்கையை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 'இதனால், அவர் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முனிரத்னா மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ