பெங்., - மைசூரு விரைவு சாலையில் காரை மறித்து தாக்கிய 3 பேர் கைது
மாண்டியா: பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில், காரில் வந்த குடும்பத்தினரை தாக்கிய விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு அத்திகுப்பேயை சேர்ந்தவர் சாகர். கடந்த 5ம் தேதி, தனது குடும்பத்தினருடன், மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவுக்கு சென்றிருந்தார். அன்றிரவு 10:30 மணிக்கு, பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். மத்துார் மேம்பாலத்தில் சாகரின் காரை இரு கார்களில் வந்த சிலர் வழிமறித்தனர். காரில் இருந்து இறங்கிய நான்கைந்து பேர், வேகமாக ஓடி வந்து, சாகரின் கார் கதவை திறந்து அவரை சரமாரியாக தாக்கினர். இந்த காட்சி, சாகரின் கார் பின்னால் வந்த மற்றொரு காரின், 'டேஷ் கேமரா'வில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், நேற்று முன்தினம் தாக்குதலுக்கு உள்ளான சாகர், மத்துார் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சாகரை தாக்கிய நபர்கள் பயணித்த காரின் எண்ணை வைத்து, பெங்களூரு ஏ.ஜி.எஸ்., லே - அவுட்டை சேர்ந்த மூன்று பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.