உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்ப்பிணி மனைவியை கொன்று நாடகம் காதல் கணவர் உட்பட 3 பேர் கைது

கர்ப்பிணி மனைவியை கொன்று நாடகம் காதல் கணவர் உட்பட 3 பேர் கைது

பெலகாவி : வேறொரு பெண்ணை திருமணம் செய்ய, ஆறு மாத கர்ப்பிணி மனைவியை கொன்று, விபத்து என்று நாடகமாடிய கணவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, பெலகாவி போலீஸ் எஸ்.பி., பீமாசங்கர் குலேத் நேற்று அளித்த பேட்டி: கடந்த 7ம் தேதி காக்வாட் போலீசாருக்கு போன் செய்த பிகே.கிராமத்தை சேர்ந்த பிரதீன் அன்னாப், 'சிரகுப்பேயில் இருந்து வரும் போது விபத்து ஏற்பட்டு விட்டது. என் மனைவி படுகாயம் அடைந்து உள்ளார். அவரை காக்வாட் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன். எங்களுக்கு உதவுங்கள்' என்று தெரிவித்தார். போலீசும், காக்வாட் மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், விபத்து சம்பந்தமாக யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். போலீசார், உடனடியாக பிரதீப்பை தொடர்பு கொண்ட கேட்டபோது, 'நான், மஹாராஷ்டிராவில் உள்ள மீரஜ் மருத்துவமனைக்கு வந்துள்ளேன். என் மனைவி இறந்து விட்டார். தயவு செய்து எங்களுக்கான சட்ட நடைமுறைகளை விரைவில் முடித்து தரவும்' என்று தெரிவித்தார். அதற்குள் மீரஜ் மருத்துவமனைக்கு வந்த அப்பகுதி போலீசாரிடம், நடந்த சம்பவத்தை பிரதீப் கூறியிருந்தார். இதற்கிடையில், விபத்து நடந்ததாக கூறப்பட்ட இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, விபத்து நடந்ததற்கான அறிகுறியே இல்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. காக்வாட் போலீசார், மீரஜ் போலீசாரை தொடர்பு கொண்டு, 'பிரதீப்பிற்கு காயம் ஏதாவது ஏற்பட்டு உள்ளதா' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'அப்படி எந்த காயமும் இல்லை' என்று தெரிவித்தனர். உடனே அவர்களிடம், இவ்வழக்கு விசாரணையை தங்களுக்கு மாற்றி தரும்படி கேட்டு, அதற்கான ஆவணங்களை நேரில் வந்து தருகிறோம் என்று காக்வாட் போலீசார் கூறினர். இதையடுத்து, மீரஜ் சென்ற காக்வாட் போலீசார், வழக்கு விசாரணை மாற்றம் ஆவணங்களுடன் மருத்துவமனைக்கு சென்று, பிரதீப்பிடம் விசாரணையை துவக்கினர். மாட்டிக் கொண்டதை உணர்ந்த பிரதீப், மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டார். இவரது மனைவி சைதாலி, 23, பிரதீப் இருவரும் காதலித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சைதாலி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். இவ்வேளையில் வேறொரு பெண்ணை பிரதீப் காதலித்து வந்தார். அப்பெண்ணுக்கு, பிரதீப் திருமணமானவர் என்பது தெரியாது. அப்பெண்ணை திருமணம் செய்வதற்காக, முதல் மனைவியை கொல்ல திட்டமிட்டார். இதற்காக சம்பவ தினத்தன்று, தன் மனைவியை காரில் அழைத்து சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திய அவர், மனைவி சைதாலியின் தலையை காரில் மோதி கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து, பிரதீப், அவருக்கு உதவிய கூட்டாளிகள் சதாம் அக்பர் இமாம்தார், ராஜன் கணபதி காம்ப்ளே ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை