உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / துமகூரில் ராஜண்ணா ஆதரவாளர்கள் போராட்டம் தற்கொலைக்கு முயற்சித்த 4 பேர் மீட்கப்பட்டனர்

துமகூரில் ராஜண்ணா ஆதரவாளர்கள் போராட்டம் தற்கொலைக்கு முயற்சித்த 4 பேர் மீட்கப்பட்டனர்

பெங்களூரு,: ராஜண்ணாவை, அமைச்சரவையில் இருந்து நீக்கியதை கண்டித்து, துமகூரில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில், விஷம் குடித்தும், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பா.ஜ., அரசும், தேர்தல் ஆணையமும் ஓட்டுகளை திருடுவதாக குற்றம்சாட்டி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் கடந்த 8ம் தேதி பெங்களூரில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் தொடர்பாக பதிலளித்த ராஜண்ணா, 'ஓட்டு திருட்டு நடந்தது உண்மை தான். லோக்சபா தேர்தல் நடந்தது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது எல்லாம் எங்கள் அரசு காலத்தில் தான் நடந்தது. அப்போது கண்ணை மூடி கொண்டு இருந்தனரா' என்று கருத்து தெரிவித்தார். இக்கருத்தை வைத்து, ஓட்டு திருட்டு குறித்து பேசும் ராகுலை, பா.ஜ., விமர்சித்தது. இதனால் கோபமடைந்த அக்கட்சி மேலிடம், ராஜண்ணாவிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிக்கும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அமைச்சரவையில் இருந்து நேற்று முன்தினம் ராஜண்ணா நீக்கப்பட்டார். துமகூரு மாவட்டம், மதுகிரி தொகுதி எம்.எல்.ஏ.,வாக ராஜண்ணா உள்ளார். இதனால், அவரது ஆதரவாளர்கள் மதுகிரியில் இன்று, 'பந்த்' நடத்த அழைப்பு விடுத்தனர். நேற்று காலை அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள் எம்.எல்.கே., கல்யாண மண்டபத்தில் பெருமளவில் கூடினர். இன்று பந்த் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தவே வந்தனர். ஆனால், நேற்றே பெருமளவில் ஆதரவாளர்கள் கூடியதால், போராட்டத்தை துவக்கிவிட்டனர். அங்கிருந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் நெடுகிலும் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 'ராஜண்ணாவின் செல்வாக்கு இல்லாமல், துமகூரில் காங்கிரஸ் இல்லை. ' 'அவரை உடனடியாக அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் இல்லையெனில், முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, கூட்டணி ஆட்சியை கலைத்தது போன்று, வால்மீக சமூகத்தை சேர்ந்த நாங்கள், காங்கிரஸ் அரசை கவிழ்ப்போம்' என்று கோஷம் எழுப்பினர். ஊர்வல பாதையில் திறந்திருந்த கடைகளை மூடும்படி எச்சரித்தனர். அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். எம்.ஜி., ஸ்டேடியம் அருகே, அவரது ஆதரவாளர் ஒருவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அங்கிருந்தவர்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர். இவரது மனைவிக்கு, டி.சி.சி., எனும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ராஜண்ணா வேலை வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று பாவகடா சதுக்கத்தில் இருவர் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததை அங்கிருந்தவர்கள் தடுத்தனர். மேலும், ஒருவர் கழுத்தில் கயிற்றை கட்டி, இறுக்கிக் கொள்ள முயற்சித்தவரையும் காப்பாற்றினர். அத்துடன், மதுகிரி நகராட்சி தலைவர், துணைத்தலைவர், அவரது ஆதரவாளர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கர்நாடகாவில் வால்மீக சமூகத்தை சேர்ந்த 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. ராஜண்ணாவுக்கு பதிலாக, அவரது மகன் ராஜேந்திராவை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடத்திடம் முதல்வர் பேசி வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை