உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 7 அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 40 இடங்களில் சோதனை!: லோக் ஆயுக்தா அதிரடியில் சிக்கிய நகைகள், பணம்

7 அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 40 இடங்களில் சோதனை!: லோக் ஆயுக்தா அதிரடியில் சிக்கிய நகைகள், பணம்

பெங்களூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில், சமீபகாலமாக லோக் ஆயுக்தா சோதனை நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பும், கோலாரின் நில மதிப்பீடு துறை சர்வே அதிகாரி சுரேஷ் பாபு, சுரபுரா தாலுகா சுகாதார அதிகாரி ராஜிவ் வெங்கடப்பா உட்பட பல்வேறு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா சோதனை நடந்தது. நேற்றும் லோக் ஆயுக்தாவின் வேட்டை தொடர்ந்தது. அதிகாலையே பல அதிகாரிகளுக்கு, அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக புகார்கள் வந்ததால் துமகூரின், நிர்மிதி மையத்தின் இயக்குனர் ராஜசேகர், தட்சிண கன்னடா மாவட்டத்தின், சர்வே மேற்பார்வையாளர் மஞ்சுநாத், விஜயபுராவின் அம்பேத்கர் மேம்பாட்டு கார்ப்பரேஷன் அதிகாரி ரேணுகா சாதர்லே...பெங்களூரு நகர் மற்றும் ரூரல் திட்ட இயக்குனரக கூடுதல் இயக்குனர் முரளி, பெங்களூரு சட்டம் அளவியல் பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜ், ஹொஸ்கோட் தாலுகா அலுவலக பி குரூப் ஊழியர் அனந்தகுமார், ஷஹாபுரா தாலுகா தாசில்தார் உமாகாந்த் ஆகிய ஏழு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் லோக் ஆயுக்தாவினர், நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர்.கலபுரகியின், அக்கமகாதேவி லே - அவுட்டில் உள்ள, தாசில்தார் உமாகாந்தின் வீடு, அலுவலகம், பண்ணை வீடு உட்பட, அவருக்கு சொந்தமான இடங்களில், லோக் ஆயுக்தா சோதனை நடத்தப்பட்டது. கட்டு கட்டாக ரொக்க பணம், சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். துமகூரில் நிர்மிதி மையத்தின் இயக்குனர் ராஜசேகரின் வீடு, அலுவலகம், அவரது சகோதரரின் வீடு உட்பட ஏழு இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விஜயபுரா நகரின், செயின்ட் ஜோசப் பள்ளி பின் பகுதியில் உள்ள ரேணுகா சாதர்லேவின் வீடு, ஹொஸ்கோட்டின், போதன ஹொசஹள்ளியில் உள்ள அனந்த குமாரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. இவர்களின் வீடுகளிலும் மனை, விவசாய நிலம் என, பல சொத்து ஆவணங்கள் கிடைத்தன. இங்கு லோக் ஆயுக்தா எஸ்.பி., மல்லேஷ் தலைமையில், ஆறு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மங்களூரின், பிஜையில் உள்ள மஞ்சுநாத்தின் வீடு, அலுவலகம், சட்ட அளவியல் பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜின் வீடு, அலுவலகங்கள், வர்த்தக மையங்களில், தட்சிண கன்னடா லோக் ஆயுக்தா எஸ்.பி., குமாரசந்திரா தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரு நகர் மற்றும் ரூரல் திட்ட இயக்குனரக கூடுதல் இயக்குனர் முரளியின் பெங்களூரில் உள்ள வீடு, அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள், இவருக்கு சொந்தமான வர்த்தக மையங்கள், தொழிற்சாலை ஷெட்களிலும், லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாலையே லோக் ஆயுக்தாவினரை கண்டு அதிகாரிகள் நடுநடுங்கினர். மொத்தம் ஏழு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட, 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது. பெருமளவில் ரொக்கம், தங்கம், வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்கள், விலை உயர்ந்த கார்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆவணங்களை கைப்பற்றி, ஆய்வு செய்கின்றனர். சொத்துகளை மதிப்பிடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.'மேலோட்டமாக பார்க்கும் போது, அதிகாரிகள் சட்டவிரோத சொத்துகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது, ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே தெரியும்' என, லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி