மாணவிக்கு கட்டாய திருமண முயற்சி தாய், பாட்டி உட்பட 5 பேர் கைது
சித்ரதுர்கா : சித்ரதுர்காவில் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று கூறிய சிறுமியை தாக்கிய தாய் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.சித்ரதுர்கா மாவட்டம், செல்லகெரேயின் ரெட்டிஹள்ளி கொல்லரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஒன்பதாம் வகுப்பு மாணவி. 4ம் தேதி, அவரது தந்தை வெளியே சென்றிருந்தார். மாணவியின் விருப்பம் இல்லாமல், அவரது தாய், தன் சகோதரருக்கு சிறுமியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.மகளை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தார். வெளியே இருந்த அவரது சகோதரர், மாணவிக்கு தாலிகட்ட முற்பட்டார்.மாணவியோ, 'எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. என்னை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என கூச்சலிட்டார்.அவரின் பேச்சை யாரும் கேட்கவில்லை. தடுக்க வந்த அக்கம் பக்கத்தினரையும், தாயின் உறவினர்கள் தடுத்தனர். கிராமத்தில் இருந்த சிலர், இதுகுறித்து செல்லகெரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.திருமணத்துக்கு சம்மதிக்காத மகளை, தாய், அவரது மைத்துனர், அவரது சகோதரர், மைத்துனி, பாட்டி ஆகியோர் கடுமையாக தாக்கினர்.அம்மாணவி, 'எனக்கு திருமணம் வேண்டாம்' என அழுது கெஞ்சினார். இதை அவரது தாய் பொருட்படுத்தாமல், மகளின் கை, கால்களை கட்டிப் போட்டார்.அதற்குள் அங்கு வந்த போலீசர், மாணவியை மீட்டு, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர். வழக்குப் பதிவு செய்து மாணவியின் தாய் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.சி.டி.பி.ஓ., எனும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலக மேற்பார்வையாளர் சுமித்ரா கூறுகையில், ''மாணவிக்கு திருமணம் செய்து வைக்க தந்தைக்கு விருப்பம் இல்லை.''எனவே, அவர் இல்லாத நேரத்தில், மாணவிக்கு திருமணம் செய்து வைக்க தாய் திட்டமிட்டு உள்ளார். மாணவி எதிர்ப்புத் தெரிவிக்கவே, அவரை தாக்கி உள்ளனர்.''மாணவிக்கு படிக்க வேண்டும் என்று விருப்பம். தற்போது மாணவியின் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.