| ADDED : நவ 19, 2025 08:18 AM
பெங்களூரு: பெங்களூரில் பைக் திருடர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 52.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 38 பைக்குகள் மீட்கப்பட்டன. பெங்களூரு நகர போலீசார் வெளியிட்ட அறிக்கை: பெங்களூரில் தனித்தனி பைக் திருட்டு வழக்குகளில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 52.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 38 பைக்குகள் மீட்கப்பட்டன. மஹாதேவபுரா போலீசார் மனுகுமார், சச்சின் ஆகிய இரண்டு பைக் திருடர்களை கைது செய்தனர். இவர்கள் பகலில் தள்ளுவண்டியில் பிரியாணி விற்பனை செய்வதும், இரவில் பைக் திருடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் மனைவியருக்கும் இது தெரியும். அவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்காக சம்மதித்துள்ளனர். இவர்களிடமிருந்து 37.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 பைக்குகள் மீட்கப்பட்டன. இவர்கள் மீது ராமமூர்த்தி நகர், மஹாதேவபுரா, ஹெச்.ஏ.எல்., ஒயிட்பீல்டு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரண்டு தனித்தனி வழக்குகளில் தொடர்புடைய, ரிஷப் சக்ரவர்த்தி, அஜியுல்லா, நஜியுல்லா ஆகிய மூன்று பைக் திருடர்களை பண்டேபாளையா போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 18 பைக்குகள் மீட்கப்பட்டன. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிஷப் சக்ரவர்த்தி, பி.டெக்., பட்டதாரி. இவர் எலக்ட்ரானிக் சிட்டி, பரப்பன அக்ரஹாரா, கிரிநகர், விவேக் நகர், ராஜகோபால் நகர், இந்திராநகர், கே.எஸ்., லே - அவுட் ஆகிய பகுதிகளில் பைக் திருடி வந்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.