கூடுதல் கட்டணம் வசூல் 56 ஆட்டோக்கள் பறிமுதல்
பெங்களூரு: கூடுதல் கட்டணம் வசூலித்த 56 ஆட்டோக்களை ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் பைக் டாக்சிகள் இயங்கவில்லை. இதனால், ஆட்டோக்களில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதை பயன்படுத்திக் கொண்ட பல ஆட்டோ ஓட்டுநர்கள், பயணியரிடம் இருமடங்கு கட்டணம் வசூலித்தனர். இதுகுறித்து பல புகார்கள் வந்தன.இதை தீவிரமாக எடுத்துக் கொண்ட மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இதன்படி, நேற்று முன்தினம் பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி, எலஹங்கா, எலக்ட்ரானிக் சிட்டி, கே.ஆர்., புரம், சந்தாபூர், நெலமங்களா ஆகிய இடங்களில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பயணியரிடம் அநியாய கட்டணம் வசூலித்த 56 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முறையான ஆவணங்கள் இல்லாத 183 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து பெங்களூரு நகர போக்குவரத்து துணை கமிஷனர் ஏ.எம்.ஷோபா கூறுகையில், ''ஆட்டோ ஓட்டுநர்கள் அபராதம் செலுத்த முன்வந்துள்ளனர்,” என்றார்.