மனைவியை தாக்கிய கணவர் உட்பட 6 பேர் கைது
தாவணகெரே; கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து, மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், தாவரகெரே கிராமத்தில் வசிப்பவர் முகமது பயாஸ், 32. இவரது மனைவி ஷபீனா பானு, 28.சமீப நாட்களாக தன் உறவினர் நஸரீன் என்பவருடன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக பயாஸ் சந்தேகித்தார்.இதே காரணத்தால் தம்பதிக்கிடையே அவ்வப்போது தகராறு நடந்தது. மனைவியை தாக்கவும் செய்தார். 9ம் தேதி நஸரீன், ஷபீனா பானுவின் வீட்டுக்கு வந்திருந்தார். அந்த நேரத்தில் பயாசும் வந்தார்.அப்போது நஸரீனை கண்டு கோபமடைந்த பயாஸ், தாவரகெரேவில் உள்ள மசூதிக்கு சென்று, 'என் மனைவிக்கும், அவரது உறவினருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது' என, புகார் அளித்தார்.அங்கிருந்த கமிட்டியினர், சமாதானம் பேச ஷபீனா பானுவை வரவழைத்தனர். அவரை உருட்டுக்கட்டை, பிளாஸ்டிக் குழாயால் கண்மூடித்தனமாக தாக்கினர். அவர்களுடன் சேர்ந்து பயாசும் மனைவியை தாக்கினார்.இதை கண்ட அப்பகுதியினர், பெண்ணை காப்பாற்ற நினைக்காமல், தங்களின் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய பின், சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.அதன் பின் தானாக முன்வந்து சென்னகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணவர் முகமது பயாஸ், 32, கமிட்டி உறுப்பினர்கள் முகமது கவுஸ் பீர், 45, சாந்த் பீர், 35, இனாயித் உல்லா, 51, தஸ்தகீர், 24, ரசூல், 42, ஆகியோரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.