ரவுடி சிவகுமார் கொலையில் அதிரடி மாலுார் கல்லுாரி மாணவர் உட்பட 6 பேர் கைது
பெங்களூரு: பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், கோலாரின் மாலுார் கல்லுாரி மாணவர் உட்பட, மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். பெங்களூரு பாரதிநகரில் வசித்த சிவகுமார், 44 என்ற ரவுடி, கடந்த 15ம் தேதி வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் பாரதிநகர் போலீசார், மஹாதேவபுராவின் கிரண், விமல், நவீன், சாமுவேல், சந்தோஷ் ஆகியோரை, கொலை நடந்த மறுநாள் கைது செய்தனர். வழக்கின் முதல் குற்றவாளியான ஜெகதீஷ் தலைமறைவாக உள்ளார். இவ்வழக்கில் கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் மீதும் வழக்கு பதிவானது. அவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் சிவகுமார் கொலை வழக்கில் நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு ஆர்.எஸ்.பாளையாவின் அருண், 32, பானஸ்வாடியின் நவீன், 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படை விசாரணையில் சிவகுமார் கொலையில், கோலாரின் மாலுாரை சேர்ந்த கூலிப்படைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நேற்று காலை மாலுார் சென்ற தனிப்படை போலீசார், கூலிப்படையின் நரசிம்மா, முருகேஷ், அவினாஷ், சுதர்சன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இவர்களில் நரசிம்மா கல்லுாரி மாணவர் ஆவார். சிவகுமாரை கொலை செய்ய, கூலிப்படையிடம் கிரணும், விமலும் 1.50 லட்சம் ரூபாய் டீல் பேசியுள்ளனர். சிவகுமாரை கொலை செய்வதற்கு, முந்தைய நாள் கூலிப்படையினர், கிரண் கூட்டாளிகள் பெங்களூரு ராமமூர்த்திநகரில் உள்ள, பாரில் கூடி திட்டம் போட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் மேலும் சில பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சிவகுமாரின் தினசரி நடமாட்டத்தை கண்காணிக்க, சாமுவேலையும், ஆட்டோ டிரைவர் சிவு என்பவரையும், கிரண் நியமித்துள்ளார். சிவகுமாரை கண்காணிக்க இருவருக்கும், தினமும் 1,000 ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளார். பிப்ரவரி மாதத்தில் இருந்தே, சிவகுமார் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். அவதுாறு கருத்து அவரை கண்காணிக்க, 'செகண்ட் ஹேண்ட்' கார் கூட வாங்கி உள்ளனர். அந்த கார் தான் கொலைக்கும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. நிலத் தகராறு, கொலைக்கு ஒரு காரணம் என்று கூறப்பட்டாலும், தலைமறைவாக உள்ள ஜெகதீஷ் பற்றி, சமூக வலைதளங்களில் சிவ குமார் அவதுாறு கருத்து பரப்பியதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இன்று ஆஜர் இந்த வழக்கில் பைரதி பசவராஜ் உறவினர் அனில் என்பவரையும் பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என, பைரதி பசவராஜ் கூறினாலும், கொலையாளிகளுடன் அவருக்கு தொடர்பு இருந்ததை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இதனால் அவருக்கு எதிரான சாட்சிகளை திரட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக, பைரதி பசவராஜ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அவரை கேள்விகளால் துளைத்து எடுக்க, விசாரணை அதிகாரி பிரகாஷ் ரத்தோட் தயாராக உள்ளார்.