உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 6 சுவாமி சிலைகள் மாயம் :மடாதிபதி தலைமறைவு

6 சுவாமி சிலைகள் மாயம் :மடாதிபதி தலைமறைவு

பசவேஸ்வராநகர்: பாலேகுத்ரு மடத்தில் இருந்து, ஆறு சுவாமி சிலைகளை விற்பனை செய்ததாக, மடாதிபதி வசுதேவ சதாசிவாஸ்ரம சுவாமி மீது வழக்குப்பதிவாகி உள்ளது. இதனால் அவர் தலைமறைவாகி விட்டார். உடுப்பியின் பிரம்மாவர் தாலுகா, ஹங்கரகட்டே கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான பாலேகுத்ரு மடம் உள்ளது. இந்த மடத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான மகிஷாசுரமர்த்தினி, வல்லபகணபதி உள்ளிட்ட ஆறு சுவாமி சிலைகள் இருந்தன. கடந்த இரண்டு மாதங்களாக, அந்த சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மடத்தில் இருந்து காணாமல் போயின.

தலைமறைவு

இதுபற்றி மடத்தின் மடாதிபதி வசுதேவ சதாசிவாஸ்ரம சுவாமிகளிடம் பக்தர்கள் கேட்ட போது, 'பழைய சிலைகள் என்பதால் சேதம் அடைந்து விட்டன. சிலைகளை நதியில் விசர்ஜனம் செய்து விட்டோம்' என்று கூறினார். இதை பக்தர்களும் நம்பினர். இந்நிலையில், பெங்களூரு பசவேஸ்வராநகரில் உள்ள, பழங்கால சிலைகள் விற்பனை செய்யும், 'ஐடல்ஸ்' என்ற கடை உரிமையாளர் நாகேந்திரபிரசாத், சமூக வலைத்தள பக்கங்களில் நான்கு சுவாமி சிலைகளை பதிவிட்டு, விற்பனைக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை, பசவேஸ்வராநகரில் வசிப்பவரும், மடத்தின் பக்தருமான ஜெகதீஷ் கவனித்தார். பதிவிடப்பட்டுள்ள நான்கு சுவாமி சிலைகளும், பாலேகுத்ரு மடத்திற்கு உரியது என்பதை உறுதி செய்தார். பசவேஸ்வராநகர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மடத்தில் இருந்து ஆறு சுவாமி சிலைகள் விற்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து நாகேந்திரபிரசாத் கைது செய்யப்பட்டார். மடாதிபதி வசுதேவ சதாசிவாஸ்ரம சுவாமி, மடத்தின் நிர்வாக அதிகாரி அனில்குமார், கணக்காளர் ஜெயலட்சுமி, மடாதிபதி உதவியாளர் ஸ்ரேயாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவானது. இதுபற்றி அறிந்ததும் மடத்தை பூட்டிவிட்டு, மடாதிபதி உள்ளிட்டோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.

முக்கிய வழக்கு

புகார் அளித்த ஜெகதீஷ் கூறியதாவது: மடத்தில் இருந்து விற்கப்பட்ட ஆறு சிலைகளில், நான்கு சிலைகளை தான் விற்பனைக்கு என பதிவிட்டுள்ளனர். மீதம் 2 சிலை எங்கே என தெரியவில்லை. ஐடல்ஸ் என்ற அந்த கடையில் ஏராளமான சுவாமி சிலைகள் உள்ளன. பல மடங்களில் இருந்து விற்கப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த இடத்தில் பழங்கால சுவாமி சிலைகள் கடத்தல் நடக்கலாம் என்றும் சந்தேகம் உள்ளது. நமது நாட்டின் சொத்தை பாதுகாக்க வேண்டும். இது, முக்கியமான வழக்கு என்பதால், அரசியல்வாதிகளிடம் இருந்து அழுத்தம் வரலாம். ஆனாலும் போலீஸ், நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஐடல்ஸ் கடையில் சாமி சிலைகள் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்ததும், அதன் உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட புகைப்படங்களை அழித்து விட்டார். அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து புகார் அளித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !