60 சமூக வலைதள கணக்குகள் முடக்கம்
பெங்களூரு: கலவரத்தை துாண்டும் வகையில் கருத்து பதிவிட்ட 60க்கும் மேற்பட்ட சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டதாக பெங்களூரு நகர போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வகுப்பு கலவரங்களை ஏற்படுத்தும் வகையிலும், ரவுடிகளை ஹீரோக்கள் போல சித்திரிக்கும் செய்யும் விதமாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் சிலர் தொடர்ச்சியாக வீடியோ, புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால், சமூக வலைதளங்களில் கருத்து மோதல் நடக்கிறது. சில சமயங்களில் வகுப்பு வாத கலவரங்களுக்கும் வழி வகுக்கிறது. இதுகுறித்து பெங்களூரு நகர போலீசார் கூறுகையில், 'நகரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் சமூக ஊடகத்துறை போலீசார், சமூக வலைதளங்களில் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிடுவோரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 'இது போன்ற செயல்களில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோரின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. அந்நபர்கள் குறித்த விசாரணையையும் தீவிரப்படுத்தி உள்ளனர். 'இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்' என்றனர்.