கார் டிரைவர் கடத்தி கொலை மனைவி உட்பட 7 பேர் கைது
ராம்நகர்: கூலிப்படையை ஏவி, கார் டிரைவரை கடத்திக் கொலை செய்த வழக்கில், மனைவி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சித்ரதுர்காவின் சிக்கபையலகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 40. இவரது மனைவி வன ஜாக் ஷி, 35. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பெங்களூரு சோழதேவனஹள்ளியில் வாடகை வீட்டில் வசித்தனர்.சந்திரசேகர், வாடகை கார் ஓட்டி வந்தார். கடந்த மாதம் 26ம் தேதி ராம்நகரின் கனகபுரா அருகே சாத்தனுாரில் சந்திரசேகர் இறந்துகிடந்தார்.சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவாகி இருந்த, மொபைல் போன் அழைப்புகளின் அடிப்படையில் சோழதேவனஹள்ளியின் நாகராஜ், 34, அவரது நண்பர்களான மைசூரின் புருஷோத்தம், 32, மாண்டியாவின் நந்தன், 33, மற்றும் 17 வயது சிறுவர்கள் 3 பேர் என, ஆறு பேரை நேற்று முன்தினம் சாத்தனுார் போலீசார் கைது செய்தனர்.கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, பண தகராறு என்று முதலில் கூறினர். எவ்வளவு பணம், என்ன விபரம் என்று விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.நாகராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, சந்திரசேகர் கொலையில் அவரது மனைவி வனஜாக் ஷிக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் அவரும் கைது செய்யப்பட்டார்.நாகராஜுக்கும், வனஜாக் ஷிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த சந்திரசேகர், மனைவியை கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் கணவரை கொலை செய்யும்படி, நாகராஜிடம், வனஜாக் ஷி கூறி உள்ளார்.கூலிப்படையை ஏவி கொல்வதற்காக ஒரு லட்சம் ரூபாயும் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.