உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  70 மணி நேரம் வேலையா? நாராயண மூர்த்திக்கு ஹரிபிரசாத் கண்டனம்

 70 மணி நேரம் வேலையா? நாராயண மூர்த்திக்கு ஹரிபிரசாத் கண்டனம்

பெங்களூரு: இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி, 'இளம் தலைமுறையினர் வாரத்தில், 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும்' என்று, கூறியதை காங்கிரஸ் மூத்த எம்.எல்.சி., ஹரிபிரசாத் கண்டித்துள்ளார். பெங்களூரின் குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், தொழிலாளர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்ற ஹரிபிரசாத் பேசியதாவது: தினமும், 12 மணி நேரம் பணியாற்ற, நாம் மனிதர்களா அல்லது விலங்குகளா. தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி தினமும் எட்டு மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற உரிமையை பெற்றனர். மிக அதிகமான நேரம் பணியாற்றினால், உற்சாகம் அதிகமாகும் என்பது தவறான கற்பனை. நாராயண மூர்த்தியின் பேச்சு, இளம் தலைமுறையினருக்கு அநீதி இழைப்பதாகும், இத்தகைய பேச்சுக்கள், தொழிலாளர்களின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும். மனிதன் ஓய்வெடுக்கவும், குடும்பத்துடன் செலவிடவும் நேரம் வேண்டும். தொழிலாளர்களின் நலன் கருதி, தினமும் எட்டு மணி நேரம் பணி என, அம்பேத்கர் கால அளவு நிர்ணயித்துள்ளார். ஆனால், இன்று பெரிய தொழிலதிபர்கள், தங்களின் லாபத்துக்காக, இந்த நேரத்தை விஸ்தரிக்க முற்படுவது, அரசியலமைப்பின் நோக்கங்களுக்கு எதிரானதாகும். முதலாளிகள் வேலை கொடுப்பது உண்மை தான். அதற்காக அரசு அவர்களுக்கு, நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை சலுகை விலையில் வழங்கியுள்ளது. அவர்கள் நிறுவனத்தை வளர்க்க மக்களின் சொத்து பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கும் போது, தொழிலாளர்களை ஒடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும், எந்த முயற்சியையும் சகிக்க முடியாது. தொழிலாளர்களை இயந்திரங்களை போன்று பார்க்கக்கூடாது. யாரோ சிம்பிள் சுதாவாம். அவரை பற்றி எனக்கு தெரியாது. அவரது கணவர் வாரத்துக்கு, 70 மணி நேரம் என, கூறியுள்ளார். இவ்வளவு நேரம் பணியாற்ற, நாம் மனிதர்களா, விலங்குகளா. இவ்வாறு ஹரிபிரசாத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை