சுஹாஸ் ஷெட்டி கொலையில் 8 பேர் கைது பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டியது அம்பலம்
மங்களூரு: பஜ்ரங் தள் தொண்டர் சுஹாஸ் கொலை வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது பாசில் கொலைக்கு பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டியது, அம்பலமாகி உள்ளது.தட்சிண கன்னடாவின் பன்ட்வால் புலிமயலு கிராமத்தைச் சேர்ந்தவர் சுஹாஸ் ஷெட்டி, 30. பஜ்ரங் தள் தொண்டர். கடந்த 1ம் தேதி இரவு 8:30 மணிக்கு மங்களூரு பஜ்பே கின்னிபதவு பகுதியில், ஆறு பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இதை கண்டித்து நேற்று முன்தினம் மங்களூரில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. சில பகுதிகளில் சாலையில் டயரை போட்டு எரித்து, ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் சுஹாஸ் கொலையில் எட்டு பேரை பஜ்பே போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். 4 தனிப்படை
இதுபற்றி மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் நேற்று அளித்த பேட்டி:பஜ்பே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கின்னிபதவு பகுதியில், கடந்த 1ம் தேதி இரவு ரவுடி சுஹாஸ் ஷெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கண்டுபிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.சுஹாஸை கொலை செய்ததாக, மங்களூரு சாந்திகுட்டேயின் அப்துல் சப்வான், 29, நியாஸ், 28, கெஞ்சாரு பகுதியின் முகமது முசாமில், 32, குர்சுகுட்டேயின் கலந்தர் சபி, 31, ஜோகட்டேயின் முகமது ரிஸ்வான், 28, சூரத்கல் ஆதில் மகரூப், 25 சிக்கமகளூரு கலசாவின் ரஞ்சித், 19, நாகராஜ், 20, ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் முகமது முஜாமில் சவுதி அரேபியாவில் வேலை செய்தவர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மங்களூரு வந்தார். அப்போது தான் அவருக்கு திருமணமும் ஆனது.ஆதில் மகரூப், 2022ல் சூரத்கல்லில் கொலை செய்யப்பட்ட முகமது பாசிலின் சகோதரர். கடந்த ஆண்டு அப்துல் சப்வானுக்கும், சுஹாஸ் நண்பர் பிரசாந்த்துக்கும், சில தனிப்பட்ட காரணங்களுக்காக பிரச்னை ஏற்பட்டது. பேச்சு நடத்த அழைத்து அப்துல் சப்வானை, பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கினர். கூலிப்படை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தன்னை தாக்கிய பிரசாந்த்தை தாக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இதற்கிடையில் அப்துல் சப்வானுக்கு, சுஹாஸ், பிரசாந்த் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்தனர்.பிரசாந்த்துக்கு பாதுகாப்பாக இருந்ததால், முதலில் சுஹாஸை கொலை செய்ய அப்துல் சப்வான் கருதினார். இதுபற்றி தன் நண்பர்களான கலந்தர் சபி, ரிஸ்வான், நியாஸ் ஆகியோரிடம் கூறினார்.கொலை செய்யப்பட்ட முகமது பாசிலின் சகோதரர் ஆதில் மகரூப்பிடம், அப்துல் சப்வான் உதவி கேட்டுள்ளார்.சுஹாஸை கூலிப்படை ஏவிக் கொல்வதற்கு, ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக ஆதில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். முதற்கட்டமாக மூன்று லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளார்.நியாஸ், தன் நண்பர்களான கலசாவின் ரஞ்சித், நாகராஜிடமும் சுஹாஸை கொல்வது பற்றி கூறியுள்ளார். அவர்களுக்கும் ஒப்புக்கொண்டு மங்களூரு வந்தனர். 2 பெண்கள்
அப்துல் சப்வான் வீட்டில் இருவரும் தங்கி இருந்து, சுஹாஸ் நடமாட்டத்தை கவனித்து வந்தனர். ஏற்கனவே இரண்டு முறை சுஹாஸை கொல்லவும் முயன்றுள்ளனர். அவை தோல்வி அடைந்தன.கடந்த 1ம் தேதி சரக்கு வாகனம், கார்களில் சென்று, சுஹாஸ் சென்ற கார் மீது மோதி, அவரை காருக்குள் இருந்து இழுத்து வெளியே போட்டு கொலை செய்துள்ளனர்.தன்னை கொன்று விடுவாரோ என்ற பயத்தில் அப்துல் சப்வானும்; சகோதரனை கொன்றதற்கு பழிக்குப்பழியாக ஆதிலும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.இந்த வழக்கில் இன்னும் 2 பேரை தேடி வருகிறோம். சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு பெண்களும் இருந்ததாக, வீடியோ கிடைத்தது. அந்த பெண்கள், முகமது ரிஸ்வானின் உறவினர்கள்.அவர்களிடமும் விசாரணை நடத்தினோம். கொலையாளிகளுக்கு பி.எப்.ஐ., அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சோதனை சாவடி அமைப்பு
சுஹாஸ் கொலையில் ஹிந்துக்கள் இருவரும் கைதாகி இருப்பது, ஹிந்து அமைப்பினரை கொந்தளிக்க வைத்துள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் தட்சிண கன்னடா - சிக்கமகளூரு மாவட்ட எல்லையில், சோதனை சாவடி அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.தட்சிண கன்னடாவில் இருந்து வரும் வாகனங்களை, தீவிர சோதனைக்கு பின்னரே சிக்கமகளூரு செல்ல அனுமதிக்கின்றனர். சுஹாஸ் கொலையை கண்டித்து ஆல்துாரில் நேற்று சில கடைகள் அடைக்கப்பட்டன.
திசை திருப்ப முயற்சி
சுஹாஸ் பெற்றோர் கூறியதாவது:பழிக்குப்பழியாக சுஹாஸ் கொலை செய்யப்பட்டாரா என்று, எங்களுக்கு தெரியவில்லை. சிறுவயதில் இருந்தே சுஹாஸுக்கு, ஹிந்துத்துவா மீது தீவிரப் பற்று இருந்தது. இதை நினைத்து நாங்கள் பெருமைப்பட்டோம். ஹிந்துக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், முதல் ஆளாக முன் வந்து நிற்பான். முகமது பாசில் கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்தபின், சுஹாஸுக்கு பஜ்பே போலீசார் நிறைய தொல்லை கொடுத்தனர். அவர் செல்லும் காரில் பாதுகாப்புக்காக, ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை விதித்தனர்.ஆயுதம் எடுத்துச் சென்றால் கொலை முயற்சி, வழிப்பறி வழக்கில் கைது செய்வதாக மிரட்டினர். தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று போலீசாரிடம், சுஹாஸ் கூறி இருந்தார். ஆனாலும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை.தற்போது 8 பேரை கைது செய்துள்ளனர். அதில் 2 பேர் ஹிந்துக்கள் என்று சொல்லி, வழக்கை திசைதிருப்ப முயற்சி நடக்கிறது. அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கொலையை திட்டமிட்டு செய்துள்ளனர். என்.ஐ.ஏ., விசாரணை வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.