| ADDED : நவ 28, 2025 05:36 AM
தேவனஹள்ளி: பெங்களூரில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பனி மூட்டத்தால் விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 81 விமானங்கள் தாமதமாக சென்றன. பெங்களூரில் நேற்று அதிகாலை கடும் குளிர் நிலவியது. வானம் பனி மூட்டமாக காணப்பட்டது. இதனால், விமானங்கள் இயக்குவதில் சிக்கல் நிலவியது. கெம்பேகவுடா விமான நிலையத்திலிருந்து செல்லும் விமானங்கள் மூடுபனி காரணமாக தாமதமாக புறப்பட்டன. அதிகாலை 4:44 மணி முதல் காலை 8:00 மணி வரை, 81 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. பெரும்பாலான விமானங்கள் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டன. சில விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால், பயணியர் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. அதே போல், பனி மூட்டம் காரணமாக மற்ற இடங்களில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானங்களும் தரையிரங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன. அவ்வகையில், காலை 7:21 மணிக்கு மங்களூரில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையம் வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. காலை 7:47 மணிக்கு டில்லியில் இருந்து வந்த மற்றொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது. காலை 8:30 மணிக்கு மேல் விமான சேவை சீரானது.