உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குழந்தை பெற்ற 9ம் வகுப்பு மாணவி: பெற்றோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

குழந்தை பெற்ற 9ம் வகுப்பு மாணவி: பெற்றோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

ஷிவமொக்கா: யாத்கிரில் சில நாட்களுக்கு முன், 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றார். இதேபோன்ற சம்பவம், ஷிவமொக்காவில் நடந்துள்ளது. ஷிவமொக்கா நகரில் வசிக்கும், 15 வயது சிறுமி, ஒன்பதாம் படிக்கிறார். வயிற்று வலி என்பதால், மூன்று நாட்களாக, பள்ளிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு, வீட்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளையும், குழந்தையையும் ஷிவமொக்கா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி ஆரோக்கியமாக உள்ளார். ஏழு மாதம் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகிறது. மகள் ஏழு மாத கர்ப்பிணி என்பதே, பெற்றோருக்கு தெரியவில்லை. இது குறித்து, தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார், சிறுமியின் உடல் நிலை பற்றி தகவல் கேட்டறிந்தனர். பெற்றோரிடம் விசாரித்தனர். மகள் கர்ப்பமாக இருந்தது தங்களுக்கு தெரியவில்லை. இதற்கு யார் காரணம் என்பதும் தெரியவில்லை என்றனர். சிறுமியிடம் விசாரித்த போது, குழப்பமாக பதில் அளிக்கிறார். அவர் உடல் நிலை தேறிய பின் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: சிறுமியிடம் விசாரித்த போது, சரியாக பதில் அளிக்கவில்லை. எனவே கவுன்சிலிங் மூலம், அவரிடம் தகவல் பெறப்படும். அவரது மன நிலை, ஆரோக்கியம் தேறிய பின், விசாரிப்போம். அவரை பலாத்காரம் செய்த குற்றுவாளியை கண்டுபிடிப்போம். மாநிலத்தில் சிறுமியர் கர்ப்பமடைவது, நாளுக்கு நாள் அதிகரிப்பது கவலைக்குரிய விஷயமாகும். பள்ளிகள் மற்றும் குடும்பங்கள் சிறுமியரின் ஆரோக்கியத்தை கண்காணிக்காததே, இத்தகைய சம்பவங்களுக்கு காரணம். பெற்றோர் தங்களின் மகளிடம் வெளிப்படையாக பேச வேண்டும். பிரச்னைகளை கேட்டறிய வேண்டும். மகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். யாத்கிரில் சிறுமி 9 மாத கர்ப்பிணி என்பது, யாருக்கும் தெரியவில்லை. ஷிவமொக்காவிலும் மகள் ஏழு மாத கர்ப்பிணி என்பது, பெற்றோருக்கு தெரியவில்லை. பள்ளி நிர்வாகங்கள், மாதம் ஒரு முறை மாணவ - மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். இது அவர்களின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள உதவும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி