மோசடி பெண் ஐஸ்வர்யா மீது மேலும் ஒரு வழக்கு
பெங்களூரு: பல நபர்களின் மொபைல் அழைப்பு விபரங்களை சட்டவிரோதமாக பெற்றதாக, மோசடி பெண் ஐஸ்வர்யா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவாகி உள்ளது.மாண்டியா மாவட்டம், மலவள்ளி கிருகாவலு கிராமத்தின் ஐஸ்வர்யா கவுடா, 32. பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசித்தார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் நகைகள் வாங்கி மோசடி செய்தார்.ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார். அவர் மீதான சில வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவிடம் இருந்து 5; அவரது கணவர் ஹரிஷிடம் இருந்து 2 மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றியிருந்தனர். நீதிமன்ற அனுமதியை பெற்று, ஏழு மொபைல் போன்களில் உள்ள தரவுகளை சேகரிக்க, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.அங்கு தரவுகள் சேகரிக்கப்பட்டபோது, பல நபர்களின் மொபைல் அழைப்பு விபரங்கள், ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தது தெரிந்தது. இதுகுறித்து பேட்ராயனபுரா உதவி போலீஸ் கமிஷனர் பரத் ரெட்டி அளித்த புகாரில், ஐஸ்வர்யா மீது வழக்குப் பதிவாகி உள்ளது.