பலுான் விற்க தசராவுக்கு வந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை?
மைசூரு: பிழைப்புக்காக பெற்றோருடன், விளையாட்டுப் பொருட்கள், பலுான் விற்க மைசூரு தசரா விழாவுக்கு வந்த 10 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். பலாத்காரம் செய்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென போலீசார் சந்தேகிக்கின்றனர். கலபுரகியை சேர்ந்த பல குடும்பங்கள், மைசூரு தசராவில் பொருட்களை விற்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு, மைசூருக்கு வந்தனர். இவர்களுடன் ஒரு தம்பதி, தங்களின் 10 வயது மகளுடன் விளையாட்டுப் பொருட்கள், பலுான் விற்பனை செய்வதற்காக வந்தனர். மைசூரு பொருட்காட்சி மைதானம் உட்பட, நகரின் பல இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்து, பணம் சம்பாதித்தனர். மைதானம் அருகிலேயே, அனைவரும் கூடாரம் போட்டு தங்கியிருந்தனர். நேற்று முன் தினம் நள்ளிரவு 12:00 மணி வரை, வியாபாரம் செய்தனர். அதன்பின் கூடாரத்துக்கு வந்து உறங்கினர். தன் தாய் அருகில் சிறுமி படுத்திருந்தார். அதிகாலை 4:00 மணியளவில், கன மழை பெய்ததால், உறக்கத்தில் இருந்து தம்பதி விழித்தனர். தன் அருகில் படுத்திருந்த மகளை காணாமல் தாய் திடுக்கிட்டார். பெற்றோரும், சக வியாபாரிகளும் மழையிலேயே சிறுமியை தேடினர். சுற்றுப்பகுதிகளில் தேடியும் சிறுமியை காணவில்லை. எனவே நஜர்பாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் உடனடியாக அங்கு வந்து தேட துவங்கினர். 6:30 மணியளவில், கூடாரத்தில் இருந்து 50 அடி துாரத்தில் சிறுமியின் சடலம் கிடந்தது. உடலில் உடைகள் இருக்கவில்லை. பலாத்காரத்துக்கு ஆளாகி, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.