மேலும் செய்திகள்
பெண் தூக்கிட்டு தற்கொலை
02-May-2025
சிக்கமகளூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில், ஜாமினில் உள்ள நடிகர் தர்ஷன், படப்பிடிப்புக்காக 25 நாட்கள் வரை துபாய் மற்றும் ஐரோப்பாவுக்கு செல்ல அனுமதி கேட்டு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு அரசு தரப்பில், ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தர்ஷன் கொலை குற்றச்சாட்டை எதிர் கொண்டுள்ளவர். தனக்கு நெருக்கமான நடிகை பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதால், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவரை தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஷெட்டில் அடைத்து சித்ரவதை செய்து கொன்ற வழக்கில் தர்ஷன் கைதானார்.பிரபல நடிகர் தர்ஷன், கொலை வழக்கில் கைதானது கன்னட திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பல மாதங்கள் சிறையில் இருந்த அவர், உடல்நிலை பாதிப்பை காரணம் காட்டி, ஜாமின் பெற்றார். 'அவர் பெங்களூரை விட்டு வெளியேற கூடாது' என, நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. 'ஒருவேளை வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், நீதிமன்றத்திடம் அனுமதி பெறுவது கட்டாயம்' எனவும், உத்தரவிட்டிருந்தது. சிறையில் இருந்து விடுதலையான பின், சில நாட்கள் ஓய்வில் இருந்தார். மனைவி, மகனுடன் பொழுது போக்கினார். கோவில்களுக்கு சென்று வந்தார். உடல்நிலை தேறியதும் பாதியில் நின்ற படங்களை முடித்து கொடுப்பதில் ஈடுபட்டார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ராஜஸ்தான் உட்பட, பல்வேறு மாநிலங்களில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார்.தர்ஷன் நடிப்பில் தயாராகும், 'டெவில்' படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. பாடல் காட்சிகளை படமாக்க, துபாய் மற்றும் ஐரோப்பாவுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே ஜூன் 1 முதல், 25ம் தேதி வரை 25 நாட்கள், வெளிநாடு செல்ல அனுமதி கோரி, பெங்களூரின் 57வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில், நேற்று தர்ஷன் மனு தாக்கல் செய்துள்ளார்.இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, அரசு தரப்பு சிறப்பு வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். 'தர்ஷன் வெளிநாடு சென்றால், மீண்டும் திரும்புவது சந்தேகம். ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பாக, விசாரணை நடந்து வருகிறது. எனவே தர்ஷன் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க கூடாது' என, தெரிவித்துள்ளார்.
02-May-2025