நடிகை பாவனாவுக்கு இரட்டை பெண் குழந்தை
பெங்களூரு: திருமணம் செய்து கொள்ளாமலேயே, செயற்கை முறையில் கருத்தரித்த நடிகை பாவனா ராமண்ணாவுக்கு, இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒன்று இறந்ததால், வருத்தம் அடைந்துள்ளார். கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை பாவனா ராமண்ணா, 41. இவர் அரசியலிலும் இருக்கிறார். இவருக்கு திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை. ஆனால் குழந்தை பெற்று, தாயாக வேண்டுமென விரும்பினார். எனவே ஐ.வி.எப்., எனும் செயற்கை கருத்தரிப்பு முறையில் கருவுற்றார். கருவுற்று ஏழு மாதங்களானபோது, குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தினர். திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர். அவரது கருவில் இருந்த இரட்டை குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு ஆரோக்கிய பிரச்னை இருப்பதால், எட்டாம் மாதம் பிரசவம் நடக்க வேண்டும் என, டாக்டர்கள் கூறினர். இதன்படி பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். ஒன்பது நாட்களுக்கு முன்பு, அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. தாய்க்கும், குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு குழந்தைக்கு பிரச்னை இருந்ததால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. இதனால் அவர் வருத்தம் அடைந்துள்ளார். மற்றொரு குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.